Thursday, December 06, 2007

Star12. பல்லவியும் சரணமும் - II - 14

சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே! 'பழைய பாடல் Blogger புலிகள்' தான் பல உலவுகின்றனவே!

போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இலவசம் :-))

1. மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க

2. வீதியோரம் நீ நடந்தால், கண்களெல்லாம் உன் மேல தான்

3. பிரபஞ்சமே மாயா பஜாரடா

4. உன்னருகில் நான் இருந்தால், ஆனந்தத்தின் எல்லை அது!

5. மழைக்காலம் மாறும், வசந்தங்கள் வீசும், உல்லாசம் வாழ்வில் சேரும்

6. மீனாட்சி போல என்னை ஜொலிக்க வைத்தான், நான் மலர்ந்து நின்றேன்

7. இந்த தேவி மேனி மஞ்சள்

8. கோடிகளாசை கூடியபோது, கூடும் நெஞ்சிலே ...

9. நீ தந்த சொந்தம் மாறாது நான் கண்ட இன்பம் தீராது

10. செவந்த முகங்கண்டு என் மனசு பதறுது

11. இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு ...


******************

Wednesday, December 05, 2007

Star11a. முதல் (II class) இரயில் பயணத்திற்கு தமிழில் வழிகாட்டி... (மீள்பதிவு)

ஊக்கம்: முகமூடியின் இப்பதிவு மட்டுமே!!!

இது இந்தியாவை (சென்னையிலிருந்து கிளம்பும் இரயில்களை!) மனதில் வைத்து மட்டுமே எழுதப்பட்டது. இரயிலில் கரன்ஸி, பர்ஸ் மற்றும் உடைமைகளுக்கு நீங்களே பொறுப்பு ! (இரயிலின் படங்கள் வேண்டுபவர்கள் எனக்கு ஒரு வரி மின்னஞ்சல் அனுப்புங்கள்...)

முன்னேற்பாடு

* உங்கள் லக்கேஜின் எடை பற்றியெல்லாம் கவலை வேண்டாம் (உங்களால் அதை தூக்கிக் கொண்டு செல்ல முடியுமா என்பது தவிர !!!)
* நெடுந்தூர பயணம் என்றால், இரயிலில் சாப்பிட புளிசாதம், இட்லி, சப்பாத்தி என்று வகையாக (சீக்கிரம் ஊசிப் போகாத அயிட்டங்களாக!) சாப்பாடு கட்டி எடுத்துக் கொள்ளுங்கள். வழியில் வரும் ரயில் நிலையங்களில் கிடைக்கும் உணவை உண்டால் வயிறு புடுங்கிக் கொள்ளலாம் !!!
* இரயில் டிக்கெட், போர்வை, சோப்பு, சீப்பு, செயின், பஞ்சு (காது ப்ராப்ளம் இருந்தால்!) வகையறாக்கள்
* தண்ணீர் --- குடிக்க வாங்கிக் கொள்ளலாம், ஆனால், நெடுந்தூர பயணம் என்றால், இரயிலில் ஏறிய அடுத்த நாள் கழிவரையில் தண்ணீர் வராது. எனவே ...... (பேப்பரே ஓகே என்றால் உங்கள் இஷ்டம் !!!)
* ஆட்டோக்காரருடன் மல்லு கட்ட வேண்டிய (மனித / லக்கேஜ் கட்டணம் ...) சூழ்நிலைக்கான சாத்தியம் அதிகம் இருப்பதால், இரயில் நிலையம் செல்ல சற்று முன்னதாகவே கிளம்பவும் !
* ரொம்ப தாமதமாக கிளம்பினாலும், ஆட்டோக்காரரிடம் இரயில் புறப்படும் நேரத்தைக் கூறி, ஒரு பத்து ரூபாய் எக்ஸ்டிரா தருவதாக கூறி விட்டால், எப்பாடு பட்டாவது உங்களை இரயில் புறப்படும் முன்பாக, நிலையத்தில் சேர்த்து விடுவார், ஆனால், சேரும்வரை அவர் ரோடு மேல் செய்யும் சாகசங்களைக் கண்டு, உங்களுக்கு நாக்கு வெளியே தள்ளி விடும் என்பது ஒரு சின்ன எச்சரிக்கை !!!
* இரயில் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது 3 நிமிடங்கள்(!) முன்பாக இரயில் நிலையத்தில் இருப்பது நலம் !!!

இரயில் நிலையத்தில்

* உங்கள் லக்கேஜ் அதிக எடை இருந்தால், இரயில்வே அலுவலர் கண்ணில் படாமல், போர்ட்டரை வைத்து இரண்டு டிரிப் அடித்து, இரயிலில் லக்கேஜை (இருக்கைகளுக்கு கீழே!) நைசாக ஏற்றி விடுங்கள். மாட்டினால், தண்டம் அழ வேண்டி வரும்.
* இரயில் நிலையத்தில் எஸ்கலேட்டரும் கிடையாது, தள்ளுவண்டியும் கிடைக்காது !(போர்ட்டர்களின் கட்டுப்பாட்டுக்குள் தான் அவை இருக்கும்!)
* பட்டாஸ் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது !!! TTE யிடம் மாட்டினால், டின் கட்டப்படுவது நிச்சயம் !!!
* தலைவலி மாத்திரை கைவசம் வைத்திருங்கள். ஏதாவது அறுவையான சகபயணி மாட்டினால் உபயோகமாக இருக்கும் !
* நிலையத்தில் ஜாலியாக தம் அடித்து விட்டு, வண்டி புறப்பட்டவுடன், ஓடிப்போய் (ஸ்டைலாக) ஏற முயற்சிக்காதீர்கள் ! வழுக்கி தண்டவாளத்தில் விழுந்தால், சிவலோக பதவி நிச்சயம் !!!
* சரக்கு அடித்து விட்டு இரயிலில் ஏறுங்கள். சரக்கோடு ஏறினால், இரயில்வே போலிஸிடம் மாட்டுவது நிச்சயம் !

இரயிலில்

* இரவு இரயில் என்றால், TTE வருவதற்கு முன்பே, உங்கள் பெர்த்தில் ஏறி தூங்காதீர்கள். அவர் உங்களை எழுப்பி உங்கள் டிக்கெட்டை எப்படியும் பரிசோதிப்பார். கொஞ்சம் கடுப்பும் அடிப்பார் !!!
* இரயிலில் ஏறியவுடன் லுங்கி அல்லது பெர்முடாஸ¤க்கு மாறி விட்டால், வீட்டில் தூங்குவது போலவே தூங்கலாம்.
* உங்கள் லக்கேஜை, நீங்கள் எடுத்துச் சென்ற செயினை (சங்கிலி) வைத்து, இருக்கையுடன் இணைத்து பூட்டி விடுங்கள். இல்லையேல், நிம்மதியாக உறங்க முடியாது.
* நல்ல ஷ¥க்கள் போட்டிருந்தால், அவற்றை பெர்த்தில் தலைக்கு மேல் வைத்துக் கொள்ளுங்கள் !!! இல்லையேல், அவை லவட்டப்படும்.
* எதுவும் இலவசமாகக் கிடைக்காது ! ஆனால், சில நல்லவர்கள், பிஸ்கட் இலவசமாக தரக்கூடும். அதை வாங்கி சாப்பிட்டால், ஆசுபத்திரியில் தான் கண் முழிக்க நேரிடும் (தலை பாரத்தோடு!)
* வழியில் பழம் தவிர எதையும் வாங்கித் தின்னாதீர்கள். மேலே சொன்னபடி, வயிறு பிடுங்க வாய்ப்பு அதிகம் !
* ஓசிப் பத்திரிகைகள் சகபயணிகளிடம் கிடைக்கும். தாராளமாக வாங்கிப் படியுங்கள் !
* இரயிலில் இருக்கும் டுபாக்கூர் மின்விசிறியை ஓட வைக்க, உங்கள் சீப்பு உபயோகமாக இருக்கும். அது ஏற்படுத்தும் இரைச்சல் கண்டு பயப்படாதீர்கள் !
* கீழ் பெர்த்தில் ஜன்னலை திறந்து வைத்து படுத்திருந்தால், உங்கள் செயின், வாட்ச், ஆகியவற்றுக்கு உத்திரவாதம் கிடையாது.

இறங்குமிடம்

* நீங்கள் இறங்க வேண்டிய இரயில் நிலையம் எப்போது வரும் என்று TTE யிடமோ சகபயணியிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
* பின்னிரவில் தான் நீங்கள் இறங்குமிடம் வருமானால், உஷாராக பார்த்து இறங்கவும். இல்லையெனில், ஏதோ ஒரு ஊருக்கு சென்று பாயை பிராண்ட நேரிடும் !
* டிக்கெட்டை காணவில்லையெனில், கூட்டத்தோடு கூட்டமாக நைசாக நழுவி விடுங்கள். இல்லையெனில், டிராக்கை தாண்டி ஏதாவது குறுக்கு வழியில் வெளியே ஓடி விடுங்கள் !
* நிலையத்தின் வெளியே, மறுபடியும், ஏதோ ஓர் ஆட்டோக்காரருடன் தகராறு செய்து, நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லுங்கள் !


இந்த இடத்தில் உங்கள் முதல் இரயில் பயணம் இனிதே நிறைவடைந்தது... வருக வருக...

* நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான இன்னொரு விஷயம் இருக்கிறது.... இரயில் நாற்றம் எல்லாம் போக குளித்த பிறகு, இந்த பதிவிற்கு மறக்காமல் ஒட்டு போடுங்கள்....

© பாலா (COPYRIGHT BALA)

இதனை பகுதியாகவோ முழுதாகவோ பயன் படுத்த நினைப்போர் செய்ய வேண்டியது :

அ) உங்கள் பயன்பாட்டில் நன்றி என்று பாலா பதிவிற்கு இணைப்பு கொடுங்கள்
ஆ) இந்த பதிவிற்கு ஓட்டு போடுங்கள்.

மீறுபவர்களுக்கு இரயில் பிரயாணச் சூட்டினால் மலச்சிக்கல் வரக்கடவது...

டிஸ்க்ளெய்மர்: இந்த கட்டுரை ஒரு வழிகாட்டி(அல்லது கையேடு) மட்டுமே... இதனால் ஏற்படும் பண, மன உளைச்சல்களுக்கு நான் பொறுப்பல்ல.


******************
இப்பதிவிற்கு அப்போது வந்த பின்னூட்டங்கள்:

Shankar said...
LOL! nice work...

10:28 PM, June 30, 2005
பரி (Pari) said...
ரொம்ப தாமதமாக கிளம்பினாலும், ஆட்டோக்காரரிடம் இரயில் புறப்படும் நேரத்தைக் கூறி, ஒரு பத்து ரூபாய் எக்ஸ்டிரா தருவதாக கூறி விட்டால், எப்பாடு பட்டாவது உங்களை இரயில் புறப்படும் முன்பாக, நிலையத்தில் சேர்த்து விடுவார், ஆனால், சேரும்வரை அவர் ரோடு மேல் செய்யும் சாகசங்களைக் கண்டு, உங்களுக்கு நாக்கு வெளியே தள்ளி விடும் என்பது ஒரு சின்ன எச்சரிக்கை !!!

உங்கள் லக்கேஜ் அதிக எடை இருந்தால், இரயில்வே அலுவலர் கண்ணில் படாமல், போர்ட்டரை வைத்து இரண்டு டிரிப் அடித்து, இரயிலில் லக்கேஜை (இருக்கைகளுக்கு கீழே!) நைசாக ஏற்றி விடுங்கள். மாட்டினால், தண்டம் அழ வேண்டி வரும்.

டிக்கெட்டை காணவில்லையெனில், கூட்டத்தோடு கூட்டமாக நைசாக நழுவி விடுங்கள். இல்லையெனில், டிராக்கை தாண்டி ஏதாவது குறுக்கு வழியில் வெளியே ஓடி விடுங்கள் !
>>>>>
இதுக்கெல்லாம் அந்நியன் வருவான்.

காமெடியா எழுதுனதுக்கான எந்த அறிகுறியும் இல்லாததால ரொம்ப சீரியஸான பதிவு போல இருக்கு.

"சின்ன சின்ன" மேட்டர்தானே இதெல்லாம். பண்ணலாம். தப்பில்ல நடத்துங்க.

10:32 PM, June 30, 2005
முகமூடி said...
நல்ல உபயோகமான பதிவு... ஆனால் இது இந்தியா முழுதும் செல்லும் ரயில் என்பதால் ஒரு விஷயத்தை விட்டு விட்டீர்கள்... வட இந்தியாவில் ரிசர்வ் பெர்த்தாக இருந்தாலும் நீங்கள் பாத்ரூம் சென்று திரும்பி வந்தால் ஒரு வயதான பெரிய உருவம் உங்கள் பர்த்தில் படுத்திருக்கும் (சொத்து வழக்கில் கைது செய்யப்படுபவர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றப்படும் முன் நெஞ்சு வலி போஸ் கொடுப்பார்களே அந்த மாதிரி ஒரு போஸில்) கால்மாட்டில் ஒருவர் சோகமே உருவாக உட்கார்ந்திருப்பார். அவர்களை எந்த்ரிக்க வைக்க படும் அவஸ்தைகள்...

அப்புறம் ஓசியில் வாங்கி படிக்கும்/படுக்கும் பேப்பரை திருப்பி கொடுக்க வேண்டுமா, வேண்டாமா?

10:46 PM, June 30, 2005
vishytheking said...
oh my god.. this bala and boston bala are two different guys.. sorry mate.. i did not realise that..

ok now back to the topic.. bala thanks for giving the mugamoodi link on the topic.. i had never seenthat blog..

yours is also a good blog..keep it up.

As pari said, its default in Delhi that if you are taking GT to chennai till mathura (around 12 AM) you cannot sleep as weekly commuters will sit in your seats and play cards.. if you ask your right like anniyan, kaise aadmi ho thum (enna aaluyya nee) nu thittuvaanga.

by the way, since i mixed up your identity, i did not invite you to answer my questions.. please feel free to answer them.
http://neyvelivichu.blogspot.com/2005/06/blog-post_112010340546883258.html

thanks and regards

vishy

please remove the ananymous login option. thanks

11:19 PM, June 30, 2005
Boston Bala said...
>>* உங்கள் லக்கேஜ் அதிக எடை இருந்தால், இரயில்வே அலுவலர் கண்ணில் படாமல், போர்ட்டரை வைத்து இரண்டு டிரிப் அடித்து, இரயிலில் லக்கேஜை (இருக்கைகளுக்கு கீழே!) நைசாக ஏற்றி விடுங்கள். மாட்டினால், தண்டம் அழ வேண்டி வரும்.///

Been there; done that :>
Sema experience pola !

1:32 AM, July 01, 2005
கோபி said...
//சரக்கு அடித்து விட்டு இரயிலில் ஏறுங்கள். சரக்கோடு ஏறினால், இரயில்வே போலிஸிடம் மாட்டுவது நிச்சயம் !//

ரெகுலரா சரக்கடிக்கிற ஒருத்தர் சொன்ன அட்வைஸ் "வாட்டரோட வோட்கா, கோக்ல விஸ்கி, ரெண்டும் கலந்தா ஒன்னுமே வெளிய தெரியாது"

3:03 PM, July 01, 2005
வீ. எம் said...
// இட்லி, சப்பாத்தி என்று வகையாக (சீக்கிரம் ஊசிப் போகாத அயிட்டங்களாக!) //
பாலா ,
இல்லயே , நான் ஊசி எடுத்து இட்லி, சப்பாத்தி ல குத்தி பார்த்தேன் , நல்லா போகுதே.. அப்புறம் எப்படி இதை ஊசிப்போகத அயிட்டம்னு சொன்னீங்க??? ஹி ஹி ஹி

///உங்கள் லக்கேஜின் எடை பற்றியெல்லாம் கவலை வேண்டாம் (உங்களால் அதை தூக்கிக் கொண்டு செல்ல முடியுமா என்பது தவிர !!!)//
அதே போல தூக்கி மேலே வைக்கும் போது கை தவறி யார் தலையில் விழுந்தால் அவருக்கு பலமாக அடி படாதவரை எடை இருந்தால் நலம்

அப்புறம் பாலா,முக்கியமான ஒரு மேட்டரை விட்டுட்டீங்க.. ரொம்ப முக்கியம் , அதுவும் முதல்ல செய்ய வேண்டியது மிஸ் பன்னிட்டீங்களே!!
வீ எம்

8:24 PM, July 04, 2005
மாயவரத்தான்... said...
த்தோடா... நம்ம 'முதல் பஸ் பயணத்துக்கு வழிகாட்டி'(http://mayavarathaan.blogspot.com/2005/05/blog-post_19.html")யை விட இது நல்லாருக்கே!

9:52 PM, July 04, 2005
enRenRum-anbudan.BALA said...
nanRi, VM & mayavarathaan !!!

//அப்புறம் பாலா,முக்கியமான ஒரு மேட்டரை விட்டுட்டீங்க.. ரொம்ப முக்கியம் , அதுவும் முதல்ல செய்ய வேண்டியது மிஸ் பன்னிட்டீங்களே!!
//
puriyalaiyE, appu !!!

10:33 AM, July 05, 2005
வீ. எம் said...
சரி, பாலா ஒரு க்ளு தரேன்..

ரயில் நிலையம் போன ஒடனே.. நம்ம கோச் (coach) ரிசர்வேஷன் சார்ட்ல ஒன்னு பார்க்கனும் !
வீ எம்

6:22 PM, July 05, 2005
enRenRum-anbudan.BALA said...
V.M,
//ரயில் நிலையம் போன ஒடனே.. நம்ம கோச் (coach) ரிசர்வேஷன் சார்ட்ல ஒன்னு பார்க்கனும் !
//

suththamA puriyalE, boss :-(

It is unfortunate that people like kuzali and LLDas are leaving Tamil blogs !!!

1:58 PM, July 07, 2005
Voice on Wings said...
//ரயில் நிலையம் போன ஒடனே.. நம்ம கோச் (coach) ரிசர்வேஷன் சார்ட்ல ஒன்னு பார்க்கனும் !
வீ எம்
//

:) sariyAna joLLu party :)

4:18 PM, July 07, 2005
வீ. எம் said...
அங்க பாருங்க voice on wings கண்டுபிடிச்சுட்டார்.. பாம்பின் கால் பாம்பறியும் னு இதை தான் சொல்லுவாங்களா??

// It is unfortunate that people like kuzali and LLDas are leaving Tamil blogs !!! //
Not leaving, taking a short break. but still it is unfortunate . hope they will come back soon

அப்புறம் பாலா , என் கடைசி பதிவுல உங்க கருத்து இல்லையே.. ? என் blog ku leave விட்டுடீங்களா?? :)

வீ எம்

5:02 PM, July 07, 2005
enRenRum-anbudan.BALA said...
இள ரத்தங்கள் எல்லாம் சம்ம ஷார்ப்பா இருக்கீங்க :) நாம தான், கொஞ்சம் வெண்குழலா ஆயிட்டோ ம் :-(
VM, ஒங்க லேட்டஸ்ட் பதிவை இப்ப தான் பார்த்தேன் ! கமெண்ட் போட்டிருக்கிறேன் ! பாருங்க !
என்றென்றும் அன்புடன்
பாலா

5:20 PM, July 07, 2005
Suresh said...
Good one. But the people who read this may not really would travel in train considering the advent of low cost airlines!!!!

9:23 AM, July 08, 2005


எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

star11. ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா ...

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

வலை பதியத் தொடங்கியதிலிருந்து ஈழப்பிரச்சினை குறித்து இதுவரை எதுவும் எழுதியதில்லை. இது குறித்து ஒரு கோணத்திலிருந்து எழுதுவது சாத்தியமில்லை, இது பல பரிமாணங்கள் கொண்ட ஒரு பிரச்சினை என்பது தெரிந்தது தான். எனவே பொதுவாக சில எண்ணங்கள். இது பெரிய ஆராய்ச்சிக் கட்டுரை எல்லாம் இல்லை! இப்பதிவில், கலைஞரின் இரங்கற்பா, ஜெயின் / தமிழக காங்கிரசின் கண்டனம், நெடுமாறன்/வைகோவின் ஆர்ப்பாட்டம் ஆகியவை பற்றி எதுவும் எழுதுவதாக உத்தேசமில்லை. ஈழப்பிரச்சினையின் தீர்வுக்கு அவற்றால் எந்தப் பயனும் இல்லை என்பதால்!

1. பெரும்பான்மையான இந்தியத் தமிழர்களுக்கு, ஈழத்துத் தமிழர்கள் பால் பரிவும், அனுதாபமும் உள்ளது என்றாலும், அந்த உணர்வின் வெளிப்பாடு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்பது தான் யதார்த்தம். 1980-களில் சிங்களப் பேரினவாதம் தமிழர்களை கொன்று குவித்தபோது spontaneous ஆக எழுந்த ஆதரவு அலை தேய்ந்து போய் விட்டது. பாமரத்தனமாகத் தோன்றினாலும், ராஜீவின் படுகொலைக்குப் பின் (அதன் தொடர்ச்சியாக புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட பின்) ஈழத்துப் பிரச்சினை மீது இங்குள்ள தமிழ் மக்களுக்கு அக்கறை வெகுவாக குறைந்து விட்டது! ஈழத்தமிழர் பிரச்சினையை தேர்தலின்போது எந்தக் கட்சியும் பிரதானமாக முன்னிறுத்துவதில்லை என்பதை வைத்துத் தான் இவ்வாறு கூற வேண்டியுள்ளது. அது வாக்குகளை பெற்றுத் தராது என்பதை மதிமுகவை வைத்தே புரிந்து கொள்ளலாம்!

2. குறைந்த பட்சம், திராவிடக் கட்சிகள் தங்கள் தேர்தல் manifesto-வில் 'ஈழப்பிரச்சினையின் தீர்வுக்கு பாடுபடுவோம்' என்றாவது குறிப்பிடுகின்றனவா என்பது கூட தெளிவாக இல்லை. சாதாரணர்கள் வேண்டுமானால் ஈழப்படுகொலைகளுக்கு கண்டனம் மட்டும் தெரிவித்து விட்டுப் போனால் பரவாயில்லை. ஆனால், ஆட்சியில் இருப்பவர்கள், மத்திய அரசுடன் மிகுந்த நல்லுறவு உள்ள ஒரு சூழலில், ஆக்கபூர்வமாக அதிகம் செய்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை. வாஜ்பாயி பிரதமராக இருந்த காலகட்டத்தில், ஒரு நல்ல வாய்ப்பு இருந்ததாகத் தோன்றுகிறது.

3. திராவிடக் கட்சிகளின் தார்மீக ஆதரவு என்பது ஈழப்பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுத்துச் செல்வதில் உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பது கண்கூடு. இக்கட்சிகளால், இந்தியா இலங்கைக்கு ஆயுதங்கள் தருவதைக் கூட தடுக்க முடியவில்லை என்பது வேதனை! தாங்கள் கூட்டணி வைத்துக் கொள்ளும் (மத்திய அரசு அமைத்த) தேசியக் கட்சிகளிடம் தீர்வு ஏற்படுவதற்கான அவசியத்தை சரியான முறையில் வலியுறுத்துவதில்லை. இக்கட்சிகளின் முக்கியக் கவலையே மத்திய அமைச்சரவையில் எத்தகைய பங்கு/முக்கியத்துவம் கிட்டும் என்பது மட்டுமே! இந்தியத் தரப்பிலிருந்து, தீர்வுக்கான ஒரு தொடக்கத்திற்கு வழி வகுக்கவோ, ஒரு சூழல் உருவாகவோ இத்தனை ஆண்டுகளில் (இந்தியாவின் தேவையற்ற IPKF ராணுவத் தலையீட்டுக்குப் பின்) இக்கட்சிகள் எதுவும் செய்யவில்லை.

4. ஈழப்பிரச்சினையைத் தீர்க்க திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் ஏதாவது வகையில் உதவ முடியும் என்ற ஒரு தோற்றமாவது நிலவுகிறது. ஆனால், செல்வி ஜெயலலிதாவின் தீவிர புலிகள் எதிர்ப்பு நிலை, (in reality) ஈழப்பிரசினையின் தீர்வுக்கு எந்த வகையிலும் அஇஅதிமுக உதவ முடியாது என்பதை தெளிவுபடுத்துகிறது!

5. இது ஒரு புறமிருக்க, விடுதலைப் புலிகள் கூட இந்திய அரசு ஈழப் பிரச்சினையில் தலையிட்டு ஒரு சுமுகத் தீர்வு ஏற்பட விரும்புவதாகவே தெரிகிறது. புலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக இருக்கும் வரை, மத்திய அரசு உருப்படியாக எதுவும் செய்ய இயலாத சூழல் உள்ளது. ஏனெனில், விடுதலைப் புலிகளை கணக்கில் எடுக்காமல், ஈழப்பிரச்சினைக்கு தீர்வு என்பது சாத்தியமே இல்லை. இது ஒரு பெரிய சிக்கல்!

6. முக்கியமாக, இந்திய அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே (நேராகவோ மறைமுகமாகவோ) ஒரு channel-ஐ உருவாக்கப் பாடுபடுவதே திராவிடக் கட்சிகள் ஈழத்தமிழர்களுக்கு செய்யக்கூடிய பெரிய உதவியாக இருக்கும். அது போலவே, இந்தியத் தரப்பிலிருந்து இலங்கை அரசுக்கு (பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவல்ல சூழலை உருவாக்குமாறு) ஒரு வலிமையான செய்தி சென்றாலொழிய, தற்போதைய நிலை மாறப் போவதில்லை. இரு தரப்பிலிருந்து தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கும், அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பார்கள்.

7. பெரும்பாலான ஈழத் தமிழர்கள் விடுதலைப் புலிகளை சிங்களப் பேரினவாதத்திலிருந்து தங்களை காக்கும் saviours ஆகவே பார்க்கின்றனர். புலிகள் சிலபல விரும்பத்தகாத செயல்கள் செய்திருப்பினும், புலிகளின் எதிர்ப்பு இல்லாத ஒரு சூழலில், சிங்களப் பேரினவாதம் அடக்குமுறையை கை கொண்டு ஈழத் தமிழரை இரண்டாம் தர குடிமக்களாக (உரிமை இல்லாத அடிமைகளாக) வைத்திருக்க விரும்பும் என்பது தான் உண்மையும் கூட!

8. விடுதலைப்புலிகளும் ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் வாயிலாக (மட்டுமே) தீர்வு ஏற்படாது என்று தெளிவாக அறிந்தே உள்ளனர். அதனால் தான், சிங்கள அரசுடன் பலமுறை பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். ஆனால், நார்வே போன்ற மீடியேட்டர்களை வைத்து உருப்படியாக எதுவும் நடக்கவில்லை / நடக்காது. இலங்கை அரசை பல வகைகளில் influence செய்யவல்ல இந்தியாவின் சரியான தலையீடு என்பது நல்லதொரு தீர்வுக்கு ஒரு புதுத் தொடக்கமாக அமையும் என்று நம்புவோம்!

என்றென்றும் அன்புடன்
பாலா

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

Star10. ஒரு 'Chip'-இன் (உருளைக்கிழங்கு அல்ல!) கதை

நான் குப்பை கொட்டும் வன்பொருள் வடிவாக்கத் துறை சார்ந்து ஏதாவது எழுதலாம் என்று தோன்றியதால் விளைந்தது இந்தப் பதிவு! இப்பதிவு, ஒரு மின்னணு சர்குயூட் எவ்வாறு வடிவமைக்கப்பட்டு சிலிக்கன் சில்லாக (CHIP) உருவெடுக்கிறது என்பதை எளிமையாக விவரிக்க ஒரு முயற்சி!

Integrated circuit-ஐ (IC) உள்ளடக்கிய சிலிக்கன் சில்லுகள் வன்பொருள் (Hardware) வகையைச் சார்ந்தவை. ஆனால், இவற்றை வடிவமைக்கக் (design) கூட மென்பொருளின் (software) துணை தேவைப்படுகிறது! இந்த சிலிக்கன் சில்லுகள் நாம் தினசரி வாழ்வில் கையாளும் பல மின்னணு சாதனங்களில் உயிராக இயங்குகின்றன. உதாரணம்: தொலைக்காட்சி, கணினி, டிவிடி, வானொலி, கைத்தொலைபேசி, ஐபாட் etc.... பாக்கெட் வானொலியிலிருந்து ராக்கெட் இயக்கம் வரை, சிலிக்கன் சில்லின் ஆதிக்கம் விரவி இருக்கிறது! வன்பொருளை வடிவமைக்க உதவும் மென்பொருட்கருவிகளை EDA (Electronic design automation) tools என்றழைக்கிறோம்.

சிலிக்கன் சில் என்ற வன்பொருளில் உள்ள மின்னணு சர்குயூட் என்பது ஆயிரம் / லட்சம் / கோடி டிரான்ஸிஸ்டர்கள் (transistor) என்ற நுண்பொருட்களால் ஆனது. டிரான்ஸிஸ்டர் என்பதே ஒரு மின்னணு சர்குயூட்டை உருவாக்கத் தேவையான அடிப்படை building block என்று கூறலாம். டிரான்ஸிஸ்டருக்கு இரண்டு நிலைகள் உண்டு, மின்னணு கடத்தும் / கடத்தா நிலைகள். இவற்றை பூலியன் கணக்கில் (Boolean Algebra), மின்னணு கடத்தும் நிலையை 1 என்றும், கடத்தா நிலையை 0 என்றும் கூறுகிறோம். பூஜ்யமும் இல்லாத, ஒன்றும் இல்லாத ஒரு நிலையைப் (tristate) பற்றிக் கூறி, வாசிக்கும் மென்பொருளாளர்களை அதிகம் குழப்ப எண்ணமில்லை :)

டிரான்ஸிஸ்டர்கள் கொண்டு, குறிப்பிட்ட வன்பொருள் செயலாக்கம் (hardware functionality) உடைய கேட்'களை (gates) வடிவமைக்கலாம். இவற்றில் முக்கியமானவை, AND, OR, NOR, NAND எனப்படுபவை. உதாரணத்துக்கு, இரண்டு உள்ளீட்டுக் கணுக்கணும் (input nodes X,Y) ஒரு வெளியீட்டுக் கணுவும் (output node F) கொண்ட ஒரு AND மற்றும் OR கேட்'டின் ஸிம்பலையும், செயலாக்கத்தை விளக்கும் Truth Table-ஐயும் படத்தில் காணலாம். AND-இன் எதிர்மறை NAND, அது போலவே எதிர்மறையானவை OR-உம் NOR-உம். இரண்டுக்கும் மேற்பட்ட உள்ளீட்டுக் கணுக்கள் கொண்ட கேட்'களையும் உருவாக்க முடியும்.



ஒரு கேட்'டின் Truth Table என்பது உள்ளீடுகளின் வேறுபட்ட நிலைகளில், வெளியீட்டு நிலையை (0 அல்லது 1) சொல்கிறது. அது போலவே, பல உள்ளீடுகளும், வெளியீடுகளும் கொண்ட, பல கேட்'களால் ஆன ஒரு மின்னணு சர்குயூட் செயலாக்கத்தையே, ஒரு Truth Table வாயிலாக (பூலியன் வடிவில்) விவரிக்க முடியும்.

பெரும்பாலான மின்னணு சர்குயூட்கள் 'கிளாக்' (Clock, சுருக்கமாக CLK) என்ற உள்ளீட்டின் நேர வரையரைப்படி இயங்குகின்றன. ஒரே சீராக 0 நிலைக்கும் 1 நிலைக்கும் மாறி மாறி இடம் பெயரும் உள்ளீடு (input) கிளாக் என்றழைக்கப்படுகிறது. கிளாக்கை உள்ளீடாகப் பெற்றுச் செயல்படும் (சில கேட்'களால் ஆன) நுண்பொருளை FLIPFLOP என்கிறோம். மின்னணு சர்குயூட்கள் பொதுவாக பல உள்ளீடுகளும் வெளியீடுகளும் கொண்டவை. அவற்றின் செயலாக்கத்தை (அதாவது, கிளாக் வாயிலாக நிறுவப்பட்ட ஒரு குறிப்பிட்ட கணத்தில், உள்ளீடுகளின் நிலையைப் (0,1) பொருத்து வெளியீடுகளின் நிலை எவ்விதம் அமைய வேண்டும்) சரி பார்த்துக் கொள்ள அலைபடங்கள் (Waveform diagrams) உதவுகின்றன. கீழே உள்ள படத்தில் காண்க.



வன்பொருள் சர்குயூட் வடிவமைப்பு என்பதும், தற்சமயம், பொட்டி தட்டும் (code அடிக்கும்) வேலை தான்! இதற்கென்று பிரத்யேகமான வன்பொருள் வடிவாக்க மொழிகள் (Hardware Description Languages) உள்ளன. பொதுவாக, வெரிலாக் (verilog) மற்றும் VHDL என்ற இரண்டு மொழிகளே பயன்படுத்தப்படுகின்றன. இம்மொழிகளின் ஆணைகளைக் கொண்டு, பலவகை கேட்'களும், flipflop-களும் கொண்டு உருவாக்கப்பட வேண்டிய ஒரு வன்பொருள் செயலாக்கத்தை (hardware functionality), code வடிவில் எழுத/விளக்க முடிகிறது.

15 ஆண்டுகளுக்கு முன், இந்த மொழி வசதி இல்லை. அப்போதெல்லாம், ஒரு சர்குயூட்டை உருவாக்க, CAD கருவிகளின் துணை கொண்டு, கணினி திரையில் வன்பொருள் செயலாக்கத்தை ஒரு சர்குயூட் படமாக வரைய வேண்டிய சூழல் நிலவியது. இம்மொழிகள் வந்த பிறகு, மின்னணு சர்குயூட் வடிவாக்கப் பணியும் எளிதாகி, நிறைய நேரமும் மிச்சப்படுகிறது. அதோடு, மிகப்பெரிய (கோடிக்கணக்கான கேட்'களால் ஆன), கடினமான (complex) வன்பொருள் செயலாக்கத்தை, ஒரு வடிவாக்க அணியிடம் (Design Team), பல கூறுகளாகப் பிரித்து தர ஏதுவாகிறது. இறுதியில், அக்கூறுகளை ஒருங்கிணைப்பதன் மூலம், பெரியதொரு வன்பொருள் செயலாக்கத்தின் Top Level Code உருவாகிறது. ஒரு Sample code கீழே!



இப்படித் தயாரான குறியை (code) சிமுலேட்டர் (Simulator) என்ற EDA கருவி கொண்டு, நமக்குத் தேவையான வன்பொருள் செயலாக்கத்தோடு (மேலே குறிப்பிட்ட அலைபடங்கள் துணையோடு) சரி பார்க்க (validate) முடிகிறது. செயலாக்கத்தில் குறை/தவறு இருப்பின், மென்பொருளாளர்கள் செய்வது போலவே, குறியை debug செய்து மாற்றுகிறோம் !

அடுத்த கட்டம் தான் முக்கியமானது. ஸின்தஸைஸர் (Synthesizer) என்ற EDA கருவி தான், சிமுலேட்டர் மூலம் சரிபார்க்கப்பட்ட குறியை, வன்பொருள் சர்குயூட்டாக மாற்றுகிறது. அதை உருவாக்க, ஸின்தஸைஸர் கருவிக்கு, பலவகை கேட்'கள் பற்றிய விவரங்கள் அடங்கிய 'வன்பொருள் நூலகங்கள்' (Hardware Libraries), தேவைப்படுகின்றன. அந்த சர்குயூட்டை கணினித் திரையிலும் பார்க்க முடிகிறது. அதாவது, நாமே சர்குயூட் வரைந்து மெனக்கட வேண்டிய காலமெல்லாம் எப்போதோ மலையேறி விட்டது !

ஸின்தஸைஸர் கருவியின் வெளியீடு (output) மற்றொரு EDA கருவியான Place and Router-க்கு உள்ளீடாக(input) வழங்கப்பட்டு, இறுதியில், மின்னணு சர்குயூட்டின் வன்பொருள் செயலாக்கமானது, ஒரு சிலிக்கன் சில்லில் பதியப்பட வேண்டிய ஒரு வகை ஜியாமெட்ரிக் விவரங்கள் (அதாவது, சிலிக்கன் சில்லுக்குள் சர்குயூட்டின் ஒவ்வொரு கேட்'டும் (gate) அமைய வேண்டிய இடம் (co-ordinates) மற்றும் அதற்கும் மற்ற கேட்'களுக்கும் உள்ள இணைப்புகள் போன்ற தகவல்கள்) அடங்கிய கோப்பாக, சிலிக்கன் சில்லை தயாரிக்கும் (chip fabrication) நிறுவனத்திற்கு (Foundry) தரப்படுகிறது. கீழே உள்ள படத்தில் காண்பது போன்ற சிலிக்கன் சில்லுகள் உருவாகின்றன.


Place and Route கருவி மற்றும் Foundry குறித்து, அதிக டெக்னிகலான விவரங்களை தவிர்த்து விடுகிறேன்! இதற்கு மேல் உங்களை 'அறுத்தால்' அடி விழும் என்ற பயம் தான் :)
ஒரு 'சிப்'பின் கதையை இதை விட எளிமையாக என்னால் கூற முடியாது, சுபம் :)

என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, December 04, 2007

Star9. நம்மாழ்வாரின் பாசுர முத்துக்கள்

திருவாய்மொழி

2793@
இலனது உடையனிது* என நினைவரியவன்*
நிலனிடை விசும்பிடை* உருவினன் அருவினன்*
புலனொடு புலனலன்,* ஒழிவிலன் பரந்த* அன்-
நலனுடை ஒருவனை* நணுகினம் நாமே.* 1.1.3


இப்பொருள் தனக்குடையவன் அல்லது தனக்கில்லாதவன் என்று நினைக்க இயலா தன்மை கொண்டவனும், உயிர்களிலும், உயிரில்லாதவற்றிலும் அந்தர்யாமியாக இருப்பவனும், (உரு: உடல், அரு: ஆன்மா) உணரப்படுகின்ற அனைத்திலும் நிறைந்திருந்தும் அப்பொருட்களின் குணங்களும் குற்றங்களும் தன்னைச் சாரா தன்மை கொண்டவனும், இவ்வகையில் எல்லாவற்றிலும் விரவி பரவியிருப்பவனும் (All Pervading) ஆன, நற்குணங்களுக்கு அதிபதியான ஒப்பற்ற பரமனை நாம் அடைந்தோம்!

2839@
மானேய் நோக்கி மடவாளை* மார்வில் கொண்டாய். மாதவா.*
கூனே சிதைய உண்டைவில்* நிறத்தில் தெறித்தாய். கோவிந்தா.*
வானார் சோதி மணிவண்ணா.* மதுசூதா. நீ அருளாய்* உன்-
தேனே மலரும் திருப்பாதம்* சேருமாறு வினையேனே. 1.5.5

மானின் கண்களை ஒத்த கண்களைக் கொண்ட திருமகளை உன் மார்பில் தரித்ததால், மாதவன் என்ற திருநாமம் கொண்டவனே!
மந்தரைக் கிழவியின் கூன் நீங்கும்படியாக அவள் மார்பில் உண்டை வில்லால் அடித்த கோவிந்தனே!
வானுலகமெல்லாம் நிறைந்த ஒளிமிக்க நீலமணி நிறத்தவனே!
அரக்கன் மதுவை மாய்த்த மதுசூதனனே!
தேன் நிறைந்த தாமரை மலர்களை ஒத்த உன் திருவடிகளை நான் அடைய அருள் புரிவாயாக!
பி.கு: மந்தரையை உண்டி வில்லால் அடித்த ராமர் மீது அச்செயலை ஏற்ற மனமின்றி, நம்மாழ்வார் அப்பழியை(!) குறும்புகளுக்கு பேர் போன கிருஷ்ணன் மீது சுமத்தி விடுகிறார் :)

2954@
ஆணல்லன் பெண்ணல்லன்* அல்லா அலியுமல்லன்,*
காணலுமாகான்* உளனல்லன் இல்லையல்லன்,*
பேணுங்கால்பேணும்* உருவாகும் அல்லனுமாம்,*
கோணை பெரிதுடைத்து* எம்பெம்மானைக்கூறுதலே. 2.5.10


எம்பெருமான் ஆனவன், ஆணும் பெண்ணும் அல்லன். இரண்டு பாலிலும் சேராத அலியும் அல்லன். நம் கண்களால் காண முடியாதவன். உண்டு/இல்லை என்று ஊர்ஜிதப்படுத்த இயலாதவன். ஆனால், அடியார்களுக்கு வேண்டுகின்ற காலத்திலே, வேண்டுகின்ற வடிவில், காட்சி தந்து ரட்சிப்பவன். ஆதலால், அப்பரந்தாமன் குறித்து எடுத்துரைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்!

2964@
எந்தாய். தண்திருவேங்கடத்துள் நின்றாய்* இலங்கை செற்றாய்,* மராமரம்
பைந்தாளேழுருவ * ஒரு வாளிகோத்த வில்லா,*
கொந்தார் தண்ணந்துழாயினாய் அமுதே* உன்னை என்னுள்ளே குழைத்த எம்
மைந்தா,* வானேறே* இனியெங்குப்போகின்றதே?. 2.6.9

இப்பாசுரத்தில் ஆழ்வாரின் பேரன்பும், பெரும்பக்தியும் எப்படிப் பிரவாகமாக வெளிவந்துள்ளது, பாருங்கள்! இதற்கு பொருள் விளக்கம் தேவையில்லை! திருமாலை பலவாறாகப் போற்றி, "என்னை விட்டு எங்கு போகின்றாய்?" என்று செல்லமாக ஆழ்வார் கோபிக்கிறார் :)

3002@
கிளரொளியிளமை* கெடுவதன் முன்னம்,*
வளரொளி மாயோன்* மருவிய கோயில்,*
வளரிளம் பொழில்சூழ்* மாலிருஞ்சோலை,*
தளர் விலராகிச்* சார்வதுசதிரே. 2.10.1


கிளர்ச்சியான இளமைப்பருவம் நம்மை விட்டு விலகுவதற்கு முன்பாகவே, ஒளிமிக்க மாயவன் எழுந்தருளியிருக்கும், இளம் சோலைகளால் சூழப்பட்ட திருமாலிருஞ்சோலை மலையை அடைந்து அவன் திருவடி பற்றுவதே நாம் தளர்வற்று உய்வதற்கு சாலச் சிறந்த வழியாகும்.

3050@
அச்சுதன் அமலன் என்கோ,* அடியவர் வினைகெடுக்கும்,*
நச்சுமா மருந்தம் என்கோ.* நலங்கடல் அமுதம் என்கோ,*
அச்சுவைக் கட்டி என்கோ.* அறுசுவை அடிசில் என்கோ,*
நெய்ச்சுவைத் தேறல் என்கோ.* கனியென்கோ. பாலெங்கேனோ. 3.4.5


ஆழ்வார் பெருமாளை 'எப்படி அழைபேன் உன்னை?" என்று பக்தியால் உருகுகிறார்! அற்புதமானதொரு பாசுரம்!

"பெருமானே! உன்னை அழிவில்லாதவன் (அச்சுதன்) என்பேனா? அமலன் (குற்றமற்றவன்) என்பேனா? அடியாரின் பாவங்களை போக்கும் உயர்ந்த மருந்து என்பேனா? அமுதம் என்பேனா? நற்சுவை உடைய கறுப்புக் கட்டி என்பேனா? அறுசுவை உணவு என்பேனா? மிக்க சுவையுடைய தேன் என்பேனா? கனி என்பேனா? பால் என்பேனா? உன்னை என்னவென்று அழைப்பேன் ?"


3856@..
திருமாலிருஞ்சோலை மலையே* திருப்பாற் கடலே என்தலையே*
திருமால்வைகுந்தமே* தண் திருவேங்கடமே எனதுடலே*
அருமாமாயத்து எனதுயிரே* மனமே வாக்கே கருமமே*
ஒருமா நொடியும் பிரியான்* என் ஊழி முதல்வன் ஒருவனே. (2) 10.7.8


இப்பாசுரத்தில் ஆழ்வார் தனது உடல், உயிர், சிந்தனை, வாக்கு, செயல் என்று அனைத்திலும் பரந்தாமனே நிறைந்திருப்பதால், தன்னை விட்டு ஒரு நொடியும் விலக முடியாத நிலைமையில் பரமன் உள்ளதை, அந்தப் பெருமாளுக்கே சுட்டிக் காட்டுகிறார் ! பரந்தாமனை எப்படி தன் பேரன்பாலும், பரிபூர்ண பக்தியாலும் நெகிழ வைத்து கட்டிப் போடுகிறார், பாருங்கள்!

3867@
கண்ணுள் நின்று அகலான்* கருத்தின்கண் பெரியன்*
எண்ணில்நுண் பொருள்* ஏழிசையின் சுவைதானே*
வண்ணநன் மணிமாடங்கள்சூழ்* திருப்பேரான்*
திண்ணம் என்மனத்துப்* புகுந்தான் செறிந்துஇன்றே. 10.8.8


எம்பெருமான், என் கண்ணை விட்டு அகலாமல் இருக்கிறான். என்னைத் தன் திருவடி சேர்த்துக் கொள்வதில் கருத்தாக இருக்கிறான்! அவன் எண்ணத்துள் அடங்கா நுட்பமான இயல்புடையவன். ஏழு இசைகளின் சுவையானவன். அழகிய மாணிக்க மாடங்கள் சூழ்ந்த திருப்பேர் நகரில் கோயில் கொண்டவன். அப்பேற்பட்டவன் என் நெஞ்சு நிறைய புகுந்திருப்பது முற்றிலும் உண்மையே!

3879@
வைகுந்தம் புகுதலும்* வாசலில் வானவர்*
வைகுந்தன் தமர்எமர்* எமதிடம் புகுதென்று*
வைகுந்தத்து அமரரும்* முனிவரும் வியந்தனர்*
வைகுந்தம் புகுவது* மண்ணவர் விதியே. 10.9.9


பரமபதத்தின் திருவாயிலை அடைந்தபோது, அங்கு நின்ற தேவர்களும் முனிவர்களும், "வைகுந்தனின் அடியார்கள் எங்கள் தலைவர்கள்! உங்களை வரவேற்பதில் எமக்கு பெருமகிழ்ச்சி!" என்று வியந்து போற்றி வரவேற்றார்கள். அத்துடன், "பூவுலக மாந்தர் பரமபதம் அடைவதும் விதிக்கப்பட்ட நற்செயலே!" என்றும் ஆனந்தப்பட்டனர்!

3882@..
முனியே.நான்முகனே.* முக்கண்ணப்பா* என்பொல்லாக்-
கனிவாய்த்* தாமரைக்கண் கருமாணிக்கமே என்கள்வா.*
தனியேனாருயிரே.* எந்தலை மிசையாய் வந்திட்டு*
இனிநான் போகலொட்டேன்* ஒன்றும்மாயஞ் செய்யேல் என்னையே. (2)


இத்திருப்பாசுரத்தில், ஆழ்வார் பெருமானிடம், அவன் திருவடிகள் தன் தலை மீது பட்ட பிறகு, பரமன் தன்னை விட்டு பிரிந்து செல்ல உடன்பட மட்டேன் என்றும், பரமன் ஒன்றே கதி என்ற தன்னை வஞ்சிக்கலாகாது என்றும் உருகி கேட்டுக் கொள்கிறார்! பாசுரத்தின் வரிகளில் சரணாகதித்துவ பேரன்பு அற்புதமாக வெளிப்பட்டுள்ளது!!!

திருவிருத்தம்

2573@
வணங்கும் துறைகள்* பலபல ஆக்கி,* மதிவிகற்பால்-
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி,* அவையவைதோறு-
அணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பிவைத்தாய்*
இணங்கு நின்னோரை இல்லாய்,* நின்கண் வேட்கை எழுவிப்பனே. 96


உன்னை வணங்கி வழிபடுவதற்கான, கர்மம், ஞானம், பக்தி என்ற மூவகைப்பட்ட யோகங்களை உருவாக்கியவன் நீயே! எண்ணங்களின் வேறுபாட்டால் ஒன்றோடொன்று முரண்படுவது போலத் தோன்றும் பல (வைணவ, சைவ, சமண .. ) மதங்களையும் உருவாக்கி, மாந்தர் (உன்னை அந்தராத்மாவாகக் கொண்ட) பலவகைப்பட்ட தெய்வங்களையும் வழிபடுமாறு செய்வித்தாய்! இப்படியாக உன் கீர்த்தியானது வியாபித்திருக்கும்படி செய்தாய்!

முழுமுதற்கடவுளான உன்னை தலைவனாகக் கொண்ட நான், பிற சமயத்தவர் மீது பிணக்கின்றி, உன் மேல் எனக்குள்ள பக்தியை பெருக்கிய வண்ணம் இருப்பேன்!

2516@
நீலத் தடவரை மேல்* புண்டரீக நெடுந்தடங்கள்-
போல,* பொலிந்து எமக்கு எல்லாவிடத்தவும்,* பொங்குமுந்நீர்-
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர்பிரான்*
கோலம் கரிய பிரான்,* எம்பிரான் கண்ணின் கோலங்களே. 39


இப்பாசுரம் தலைவனது வடிவைக் கண்ட தலைவி, தன் தோழியிடம் கூறுவது போல அமைந்தது. விஸ்வரூபப் பெருமானின் கண்ணழகுக்கு ஆழ்வாரின் உவமானத்தைப் பாருங்கள்!

"நீலரத்ன மயமான ஒரு பெரிய மலையின் செந்தாமரை மலர் பூத்த தடாகங்களை ஒத்த கண்களை உடையவனும், கடல் சூழ்ந்த மண்ணுலகுக்கும், விண்ணுலகுக்கும், மற்றும் நல்லவர் யாவர்க்கும் தலைவனும், அழகிய கரிய திருமேனியனும் ஆனவன் எம்பெருமான்!"

என்றென்றும் அன்புடன்
பாலா

Star8. 3 ஜோக்ஸ் - 2 சைவம் 1 அசைவம்!

நண்பர்களே,

இதற்கு முன் ஒரு 7 சீரியஸான பதிவுகள் இட்டேன். எனவே, நீங்க கொஞ்சம் relax ஆகிக்க இந்த ஜாலிப் பதிவு :)

A ஜோக் படிக்க விரும்பாதவங்க, முதல் இரண்டை வாசித்து விட்டு அப்பீட் ஆகவும் ;-)

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!

வழக்காடு மன்றத்தில் ஒரு வழக்கு நீதிபதி முன் வந்தது. ஒரு மூதாட்டி, சாட்சி கூண்டுக்கு அழைக்கப்பட்டார்.

வழக்கறிஞர், மூதாட்டியை நோக்கி, "திருமதி.மரகதம், என்னை உங்களுக்குத் தெரியும் தானே?"

மூதாட்டி, "உன்னைத் தெரியாமல் என்ன, பிரகாஷ் ? சின்ன வயதிலிருந்தே உன்னைத் தெரியும், ஆனால் சிலாக்கியமாக ஒன்றுமில்லை! நீ பொய் சொல்கிறாய், மனைவியை ஏமாற்றுகிறாய், பிறரை உபயோகப்படுத்திக் கொண்ட பின் அவர்களை தூற்றுகிறாய், உன்னை பெரிய மேதாவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்! ஆகவே, உன்னை எனக்கு மிக நன்றாகவேத் தெரியும்!" என்றார்.

மூதாட்டியின் பதிலில் வழக்கறிஞர் ஆடிப்போய் விட்டார்! எப்படி வழக்கைத் தொடர்வது என்று புரியாத குழப்பத்தில், அவர் எதிர்தரப்பு வக்கீலை சுட்டிக் காட்டி, "திருமதி.மரகதம், இவரை உங்களுக்குத் தெரியுமா?" என்று வினவினார்!

அதற்கு அம்மூதாட்டி,"ஏன், ரமேஷை பல வருடங்களாக எனக்குத் தெரியும்! அவன் ஒரு சோம்பேறி, நல்லது சொன்னால் கேட்க மாட்டான், நிறைய குடிப்பான். அவனுக்கு யாரிடமும் நல்லுறவு கிடையாது. சட்டத்தை பற்றி ஒரு எழவும் தெரியாமல், வக்கீலாகி விட்டவன்! அவனுக்கு மூன்று பெண்களிடம் தொடர்பு இருக்கிறது. அதில் ஒருத்தி உன் மனைவி!?!" என்று கூறியதில் ரமேஷ் என்ற அந்த எதிர்தரப்பு வக்கீல் மூர்ச்சையாகும் நிலைக்கு போய் விட்டார்!

அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், "உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்!" என்றார் :)
************************************

குடி குடியைக் கெடுக்காது!

ஒரு கணவர் கூறுகிறார்:

முந்தைய நாள் அதிகம் குடித்ததால், பயங்கரத் தலைவலியுடன் ஒரு நாள் காலை கண் விழித்தேன். படுக்கைக்கு அருகே, 2 ஆஸ்பிரின் மாத்திரைகளும், குளிர்ந்த நீரும் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன்! அத்துடன், சலவை செய்யப்பட்ட எனது மாற்றுத் துணிகள் டேபிளில் இருப்பதையும் கண்டேன்! எனது அறையும் ஒழுங்காக்கப்பட்டு மிக சுத்தமாக இருந்தது! மொத்த வீடுமே படு சுத்தமாக இருந்தது!

மாத்திரைகளை விழுங்கும்போது, டேபிளில் ஒரு குறிப்பைப் பார்த்தேன்: "டார்லிங், உங்கள் காலை உணவு அடுப்பின் மேல் சூடாகவே இருக்கும், சாப்பிடுங்கள், நான் ஷாப்பிங் செல்கிறேன், ஐ லவ் யூ"

சமையலறைக்குச் சென்றால், என் மனைவியின் குறிப்பு சொன்னது போலவே, சூடான காலை உணவோடு, பத்திரிகையும் தயாராகவே இருந்தது.

என் மகன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். என் மகனைப் பார்த்து, "நேற்று இரவு என்ன தான் நடந்தது?" என்று வினவினேன்.

என் மகன், "அப்பா, நீங்கள் அதிகாலை 3 மணிக்கு மிக அதிகமான போதையில் வீட்டுக்கு வந்தீர்கள், நாற்காலியை உடைத்தீர்கள், கூடத்திலேயே வாந்தி எடுத்தீர்கள், தடுமாறி கதவின் மீது மோதி நெற்றியில் அடிபட்டுக் கொண்டீர்கள்!" என்றான்.

குழப்பத்தின் உச்சத்துக்குச் சென்ற நான், "பின் எப்படி வீடே அலம்பி விட்டது போல சுத்தமாகவும், என் காலை உணவு தயாராகவும் உள்ளது ? நியாயமாக, என்னுடன் பெரிய சச்சரவுக்கு அல்லவா உன் அம்மா தயாராக இருந்திருக்க வேண்டும் ?" என்றேன்.

என் மகன் அமைதியாக, "அப்பா, நேற்றிரவு அம்மா உங்களை தரதரவென்று படுக்கையறைக்கு அழைத்துச் சென்று, உங்கள் உடைகளையும், காலணிகளையும் களைந்தபோது, நீங்கள், 'விடு என்னை, நான் திருமணமானவன், என் மனைவியை மிகவும் நேசிப்பவன்' என்றீர்கள்" என்றான் !!!!!!!!
*****************************

மன்மத மருத்துவம்!

ஒரு மனைவி ஒரு ஹிப்னாடிஸ்ட் வகை மருத்துவ நிபுணரிடம் சென்று விட்டுத் திரும்பிய பின் தன் கனவனிடம் கூறுகிறாள்: இவ்வளவு வருடங்களாக என்னை வாட்டிய ஒற்றைத் தலைவலி பிரச்சினை தீர்ந்தது!
கணவன்: எப்படி அந்த அதிசயம் ?
மனைவி: என் தோழி ஒருத்தி பரிந்துரைத்த ஹிப்னாடிஸ்ட் மருத்துவ நிபுணரிடம் இரண்டு மாதங்களுக்கு முன் சென்றேன். அவர் ஒரு தீர்வு கூறினார், அதாவது, தினமும் இரு முறை கண்ணாடி முன் நின்று, "எனக்குத் தலைவலி இல்லை" என்று தொடர்ந்து 5 நிமிடங்கள் சொல்லுமாறு அந்த நிபுணர் கூறினார். என் தலைவலி போயே போயிந்தி!
கணவன்: சரி தான், பெரிய ஆள் தான் அந்த ஹிப்னாடிக் டாக்டர்!
மனைவி: நீங்கள் கூட இப்போதெல்லாம் படுக்கையில் சீக்கிரமே சோர்ந்து விடுகிறீர்கள் ?!? நீங்களும் ஒரு முறை சென்று அந்த ஹிப்னாடிஸ்ட்டை பார்க்கலாமே ?

கணவனும், மனைவி சொன்னதற்காக, அந்த ஹிப்னாடிஸ்ட்டை சந்தித்து விட்டு வந்தார்! வீட்டுக்கு வந்த கணமே, மனைவியை படுக்கை அறைக்கு தூக்கிச் சென்று கிடத்தி விட்டு, "இரு, இதோ வந்து விடுகிறேன்" என்று சொல்லி விட்டு, பாத்ரூமுக்குச் சென்று சில நிமிடங்களில் திரும்பியவர் மனைவிக்கு வரலாறு காணா இன்பம் (சிற்றின்பம் தாங்க:)) வழங்கினார்!!! மனைவியோ "ஐயோ, என்னவொரு மாற்றம் ?" என்று சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போய் விட்டார்!

கணவர் மறுபடியும் "இரு, இதோ வந்து விடுகிறேன்" என்று சொல்லி விட்டு, பாத்ரூமுக்குச் சென்று சில நிமிடங்களில் திரும்பி வந்து, இரண்டாவது ரவுண்டை முதலாவதை விட சிறப்பாக ஆடினார் :) மனைவிக்கோ தலை கிறுகிறுத்து விட்டது!

கணவர் மறுபடியும் "இரு, இதோ வந்து விடுகிறேன்" என்று சொல்லி விட்டு, பாத்ரூமுக்குச் சென்றார்! கணவருக்குத் தெரியாமல் அவரை மெதுவாக பின்தொடர்ந்து மனைவி பாத்ரூமுக்குச் சென்று பார்த்தார். அங்கே கணவர் கண்ணாடி முன் நின்றபடி கூறிக் கொண்டிருந்தார்:
"அவள் என் மனைவியில்லை, அவள் என் மனைவியில்லை, அவள் என் மனைவியில்லை!"
***********************************

என்ன மக்களே, என்சாய் பண்ணீங்களா :)))))))))))))

எ.அ.பாலா

Star7. சகிப்புத்தன்மை அற்ற மாசுச்சூழல்

நடந்தேறிய சில நிகழ்வுகளை பார்க்கும்போது, அகிம்சை, மத நல்லிணக்கம், சகிப்புத்தன்மையை போதித்த காந்தி பிறந்த மண்ணில் தான் நாமும் வாழ்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது. உதட்டளவில் மகாத்மாவுக்கு சேவை செய்யும் அரசியல்வாதிகள், அவரைப் பற்றிச் சிந்திப்பதை எப்போதோ நிறுத்தி விட்டார்கள்!

சில சாம்பிள்கள்:

1. ஒரு பழுத்த அரசியல் தலைவரான கலைஞர், ராமரைப் பற்றிக் கூறிய கருத்துகள் வால்மீகி ராமாயணத்தில் இருப்பதாக வைத்துக் கொண்டாலும், அவரது பேச்சு ராமரை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு எதிரானது என்று கொண்டாலும், அது மத நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதும், ஒரு மௌனப் பெரும்பான்மையை (அவருக்கு வாக்களித்தவர்களும் அதில் அடக்கம்!) காயப்படுத்துவதுமாகும் என்பதை அவர் உணர முடியாதவர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது அல்லவா? ஒரு இறை மறுப்பாளர் அப்படிப் பேசியதில் தவறில்லை என்று கேட்பவர்களுக்கு ஒரு கேள்வி: சென்ஸார் அனுமதி வழங்கிய டாவின்ஸி கோட் திரைப்படத்தை, மத நம்பிக்கையை காரணம் காட்டி தடை செய்தது ஏன் ?

2. அதைத் தொடர்ந்து, பெங்களூரில் பேருந்து எரிக்கப்பட்டதில், இரண்டு அப்பாவிகள் பலியானார்கள். கலைஞரின் மகள் வீடும் தாக்கப்பட்டது. "கண்ணுக்கு கண்" என்பது உலகத்தையே குருடாக்கி விடும் என்று காந்தி சொன்னதை நினைவு கூர்வது அவசியமாகிறது.

3. முதல்வரின் தலைக்கு விலை பேசிய வேதாந்தியின் சகிப்புத் தன்மை குறித்து என்னத்த சொல்ல!!!

4. பெங்களூரில் நடந்த வன்முறைக்கு பதிலாக, திமுகவினர் தமிழ்நாட்டிலுள்ள பிஜேபி அலுவலங்கள் மற்றும் தலைவர் வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.

5. ஒரு வாக்குப்பதிவு நடத்தி வெளியிட்டதற்காக, தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டதும், மூன்று அப்பாவிகள் பலியானதும், நமது அரசியல் சூழலின் அழுகலை (நன்றி: ரோசா வசந்த்) வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

6. சமீபத்தில் சன்டிவி DTH தொடங்கப் போவதாக அறிவித்தவுடன், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கேபிள் ஒயர்களை அறுத்து வன்முறையில் ஈடுபட்டது நினைவிருக்கலாம். எந்தப் பிரச்சினைக்கும், பேச்சு வார்த்தை மூலம் சுமுகமாக தீர்வு காணலாம் என்பது கால தாமதமாகவே உணரப்படுவது துரதிருஷ்டமே!

7. பால் தாக்கரேயை வில்லனாக சித்தரித்ததாகக் கூறிக் கொண்டு, அவுட்லுக் மீது சிவசேனா தொ(கு)ண்டர்கள் மேற்கொண்ட வன்முறை இன்னொரு உதாரணம்!

8. நந்திகிராம், சிங்கூர் (state sponsored) வன்முறை குறித்து பேசாமல் இருப்பதே நலம்!

9. நம் கலாச்சாரக் காவலர்கள் அரசியல் கட்சித் தலைவர்களின் அனுமதியுடன், குஷ்பு விவகாரத்தின்போது அடித்த கூத்து பற்றி சொல்லவே வேண்டாம்! நாம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்று புரியவில்லை.

10. உத்திரப்பிரதேசத்தில், பெரியார் எழுதியதின் மொழிபெயர்ப்பான 'சச்சி ராமாயணம்' என்ற புத்தகத்தை வெளியிடக்கூடாது என்று பிஜேபியும், பஜ்ரங்தள்ளும் பயங்கர எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தப் பிரச்சினையில் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் கூட சட்டசபையில் பிஜேபிக்கு ஆதரவாக செயல்படுவது நல்ல காமெடி!

11. ஏதோ ஒரு வடநாட்டுக் கோயிலில், ராவணன் சிலையை பிரதிஷ்டை செய்யக்கூடாது என்று ஒரு கூட்டம் கலாட்டா செய்ததில், அது நிறுத்தப்பட்டது.

12. ஒரு காஷ்மீரத்து பள்ளியில், இஸ்லாமியச் சிறுமிகளை 'வந்தே மாதரம்' பாடலை பாட வைத்து விட்டதற்கு, 'இஸ்லாம் இறை உருவ வழிபாட்டுக்கு எதிரானது' என்ற காரணத்தை முன் வைத்து தேவையில்லாத சர்ச்சை எழுந்துள்ளது. தேசத்தை தாயாக பாவித்து எழுதப்பட்ட ஒரு பாட்டை குழந்தைகள் பாடியதை வைத்து பிரச்சினை செய்ய வேண்டிய அவசியம் தான் என்ன?

13. கடந்த சில வருடங்களாக 'Valentine's Day' கொண்டாடிய இளைஞர்/இளைஞிகள் மீது வடநாட்டு (VHP/BajrangDal) கலாச்சாரக் காவலர்கள் ஏவி விட்ட வன்முறை குறித்து பல செய்திகள் வந்துள்ளன. தமது தலைவர்கள் "அப்பழுக்கற்றவர்கள்" என்று தவறாக எண்ணிக் கொண்டு தான், அவர்களின் தொண்டர்கள் இம்மாதிரி விரும்பத்தகாத வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்பது தான் மிகுந்த நகைப்புக்குரியது!

14. சமீபத்தில் தஸ்லிமாவின் விசாவை ரத்து செய்யக் கோரி நடந்த பேரணியின் தொடர்ச்சியாக நடந்தேறிய கல்கத்தா வன்முறையிலும், நந்திகிராம் வன்முறையிலும், மூன்று விஷயங்கள் யோசிக்கத் தக்கவை. ஒன்று, புகைந்து கொண்டிருக்கும் (மக்களின்) எரிச்சலையும், கோபத்தையும் எவ்வளவு சுலபமாக பற்ற வைத்து வன்முறையாக மாற்ற முடிகிறது என்பது, இரண்டு, மக்களுக்கு அரசு இயந்திரங்கள் மற்றும் ஜனநாயக முறையில் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வழிகள் மீதுள்ள நம்பிக்கையின்மை, மூன்று, அரசியல் கட்சிகளே சமூக விரோத சக்திகளை ஊக்குவிப்பது!

என்றென்றும் அன்புடன்
பாலா

Star6a. மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே! ((மீள்பதிவு)

திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய தெருவில் இருக்கும் இந்து உயர்நிலைப் பள்ளி கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பழமையானது. பள்ளிக் கட்டடம், அதே செம்மண் கலர் பெயிண்டு அடிக்கப்பட்ட தோற்றத்தோடு இன்றும் மாறாமல் காட்சியளிக்கிறது! நான் படித்த காலகட்டத்தில், அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சிலர் சேர்ந்து 'சாரதி செஸ் கிளப்' என்ற அமைப்பை நடத்தி வந்தனர். ஒருவர் அக்கிளப்பில் உறுப்பினராக ஆவது சற்று கடினமே! கிளப்பின் மூத்த உறுப்பினர்கள், சேர விரும்புபவரின் செஸ் அறிவை சோதித்துப் பார்த்து திருப்தி அடைந்தால் மட்டுமே அவர் உறுப்பினராக முடியும். சாரதி செஸ் கிளப் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை போட்டி நடத்தி, வெற்றி பெற்றவருக்கு பரிசுகளும் வழங்கி வந்தது. அந்த கிளப்பில் உறுப்பினர் ஆனதில் அப்போது எனக்கு ரொம்பப் பெருமை.

சாரதி செஸ் கிளப்பில் ஜாம்பவான்களாகக் கருதப்பட்டவர்கள், அதன் தலைவரான, 'சார்' என்றழைக்கப்பட்ட, எம்.காம். படிப்பில் தங்க மெடல் வாங்கிய ராகவன், கிண்டி பொறியியற் கல்லூரியில் படித்து வந்த வேணு (அதிபுத்திசாலி, ஆனால் கொஞ்சம் கர்வி), சென்னைப் பல்கலைக்கழக சேம்பியன் ரமணி மற்றும் சதுரங்க விளையாட்டை உயிர் மூச்சாகவும், பா·பி ·விஷரை ஆதர்ச நாயகனாகவும் பாவித்து வந்த 'செஸ்'வரதராஜன் ஆகியோர். தினமும் மாலை நேரங்களில் சார் வீட்டுத் திண்ணையில் செஸ் ஆட்டங்கள் நடைபெறும். எல்லாமே செஸ் விதிகளுக்கு உட்பட்டு நடைபெற்ற சீரியஸான ஆட்டங்கள். அதோடு உலகின் சிறந்த ஆட்டக்காரர்களின் ஆட்டங்கள் பற்றிய விவாதங்களும் உண்டு. அப்போது தான், என் வாழ்வில் மறக்க முடியாத அந்த சம்பவம் நடைபெற்றது!

அந்த கார்கால மாலைப் பொழுதில் வானம் இருண்டு, மிக லேசான தூறலுடன் மெல்லிய காற்று வீசிக் கொண்டிருந்தது. வழக்கம் போல நாங்கள் செஸ் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது வீதியில் குப்பை பொறுக்கும் ஒரு தாடிக்கார இளைஞர், தோளில் கோணியோடு, வாசலில் நின்றபடி சன்னல் கம்பி வழியாக நாங்கள் ஆடுவதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

சார் அவரைப் பார்த்து, "செஸ் ரொம்பப் பிடிக்குமா? விளையாடத் தெரியுமா?" என ஒரு பேச்சுக்கு கேட்டார். அவ்விளைஞர், " சுமார ஆடுவேங்க! என்னையும் சேத்துப்பீங்களா?" என்று பணிவாகக் கேட்டார். சார் என்ன நினைத்தாரோ, அவ்விளைஞரைப் பார்த்து, "கோணியை ஒரமாக வச்சுட்டு வாங்க. இவரோடு ஒரு ஆட்டம் ஆடலாம்" என்று வேணுவை சுட்டிக் காட்டி கூறினார். வேணு, "சார், நான் ஆடத்தான் வேண்டுமா?" என்று அயற்சியாக வினவ, சார், "பாவம், ஆசைப்படறார். ஒரு வாய்ப்பு தரலாமே" என்று குழுவின் தலைவர் என்ற முறையில் தனது முடிவைச் சொன்னவுடன் ஆட்டம் தொடங்கியது.

வேணு எங்களிடம் செய்வது போலவே, தனக்கு வெள்ளைக் காய்கள் என்று தானே நிர்ணயித்துக் கொண்டு, காய்களை செஸ் போர்டில் வரிசைப்படுத்தினார். இந்த மட்டும் ஆட வாய்ப்பு தந்தார்களே என்று
தாடிக்காரரும், அதற்கு ஆட்சேபிக்காமல், கறுப்புக் காய்களைஏற்றுக் கொண்டார்! வேணுவின் முதல் நகர்த்தல் P-K4. தாடியும் P-K4! அடுத்து, வேணுவின் P-KB4 என்ற மூவ், 'King's Gambit'க்கு தாடிக்காரருக்கு அழைப்பு விடுத்தது. வேணு, 'King's Gambit'-ஐ தொடர்ந்து ஆட்டம் செல்லக் கூடிய பலவித சாத்தியங்களிலும் விற்பன்னன் என்பதால், தாடி அந்த 'அழைப்பை' ஏற்பாரா, நிராகரிப்பாரா என்று எங்களிடையே ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது.

தாடி, PK4 X PKB5 என்று வேணுவின் சிப்பாயை வெட்டி வீழ்த்தி 'King's Gambit'க்கான அழைப்பை ஏற்றவுடன், 'தாடி கோணிக்குள் ஏதாவது செஸ் புத்தகம் வைத்திருக்கிறதோ' என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது! முதலில் கேஷ¤வலாகவும், வேகமாகவும் ஆட ஆரம்பித்த வேணு பத்து நகர்த்தல்களுக்கு பிறகு, எதிராளியின் சரியான பதில் மூவ்களைக் கண்டவுடன், யோசித்து ஆட ஆரம்பித்தார். வேணுவும் தாடியும் எதிர்மறையாக 'castle' செய்தவுடன், செஸ் ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. தூறல் வலுத்து, இடியுடன் மழை பெய்யத் தொடங்கியது. வேணு ஒரு யானையையும், ஒரு விதூஷகரையும், ஒரு சிப்பாயையும் இழந்து தாடியின் ராணியை வீழ்த்தியிருந்தார். தாடி அசரவில்லை!

இருவருமே அடுத்தவரின் பாதுகாப்பு அரணை உடைக்கத் தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருந்தனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு வேணுவுக்கு வியர்க்க ஆரம்பித்தது. இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு செஸ் போர்டையே உற்றுப் பார்த்தபடி இருந்தார். குப்பை இளைஞரின் முகத்திலோ எந்தவொரு ரியாக்ஷனும் இல்லை. இந்த வினோதமான விளையாட்டைக் காண கூட்டம் வரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில், வேணுவிடம் ராணி, ஒரு விதூஷகர், ஒரு குதிரை மற்றும் மூன்று சிப்பாய்களும், தாடியிடம், இரண்டு யானைகளும், இரண்டு குதிரைகளும், நான்கு சிப்பாய்களும் இருந்தன.

வேணு திடீரென்று, "யாரும் ஜெயிக்க முடியாது போலிருக்கு! டிரான்னு வச்சிக்கலாம்" என்றதற்கு அவ்விளைஞர், "இல்லீங்க, இன்னும் ஆட்டம் பாக்கி இருக்குதுங்க" என்றார். பயங்கரக் கடுப்பான வேணு, ஆட்டக்களத்தில், ஆக்ரோஷமான தாக்குதலைத் தொடங்கினார். அப்போது வானம் மடை திறந்தது போல, பேரிரைச்சலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. வேணுவின் தாக்குதலை திறமையாக சமாளித்த தாடி இளைஞர், தன் ராஜாவை பத்திரப்படுத்தி விட்டு, வேணுவிடமிருந்து மேலும் இரண்டு சிப்பாய்களை வீழ்த்தி விட்டார்.

ஒரு தேர்ந்த 'முடிவாட்ட' (END GAME) விற்பன்னரின் லாவகத்துடன் காய்களை நகர்த்தி, தாடிக்காரர் வேணுவின் ராஜாவை சந்திக்கு இழுத்தார். 'தொடர் செக்' (Perpetual Check) வழியிலாவது தப்பித்து டிரா செய்து விடலாம் என்ற நம்பிக்கையால் (தாடிக்கு எதிராக 'ரிஸைன்' செய்வதை வேணு அவமானமாக எண்ணியிருக்கலாம் என்பது என் யூகம்!) ,வேணு தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், தாடிக்காரர் வேணுவை நோக்கி, "செக் மேட்! ஆனால் நீங்க ரொம்ப நல்லா ஆடறீங்கய்யா. நன்றிங்க." என்று கூறி விட்டு தன் கோணிப்பையை எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்காமல், விடுவிடுவென்று நடந்து சென்று விட்டார். சரியாக மழையும் நின்று, தெருவில் மழை நீர் வெள்ளமாகத் திரண்டிருந்தது. அவ்விடத்தில் ஒரு அபரிமிதமான அமைதியும் நிலவியது!

நடந்த சம்பவத்தின் அபாரத் தன்மையையும், அசாதாரணத்தையும் உணர அங்கு கூடியிருந்த எல்லோருக்கும் சற்று நேரம் பிடித்தது. நான் தாடிக்காரர் சென்ற வழியில் ஓடி, அவரை இடைமறித்து, "ஒங்க பேர் என்னன்னு சொல்லலியே?" என்று வினவியதற்கு, அவர், "அரசன்னு தெரிஞ்சவங்க கூப்பிடுவாங்க, தம்பி" என்று சொல்லி விட்டு போய் விட்டார். அன்றிலிருந்து செஸ் விளையாட வேணு வரவில்லை! வேணுவின் மெல்லிய அகந்தையை, அந்த தாடிக்கார அறிவாளி பொட்டலம் கட்டி தன் கோணியில் எடுத்துச் சென்றதாகவே எனக்குத் தோன்றியது.

மெல்ல மெல்ல திண்ணை செஸ் ஆட்டங்களும் குறைந்து ஒரு கட்டத்தில் நின்று போயின. சார், மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்றவர் அங்கேயே செட்டில் ஆகி விட்டதாகக் கேள்வி. வேணு பொறியியல் படிப்பு முடிந்து, IIM, பெங்களூரில் மேலாண்மை படிப்புக்குப் பிறகு, பணி நிமித்தம் மும்பை சென்று விட்டார். அதன் பின் தொடர்பு இல்லை. திருவல்லிக்கேணி வீட்டை காலி செய்து போன ரமணி, தேசிய அளவில் செஸ் விளையாடியதாக, பின்னாளில் அவர் நண்பர் மூலம் கேள்விப்பட்டேன். எனக்கும் செஸ்ஸ¤க்கும் ஆன தொடர்பு, ஆங்கில தினசரிகளில் இடம்பெறும் செஸ் புதிர்களை ஆராய்வதோடு நின்று போனது!
*******************************************

நாலைந்து வருடங்களுக்கு முன், மும்பையில் எனக்குப் பழக்கமான நண்பர் ஒருவர் அழைப்பை ஏற்று, அவரை சந்திக்க மதுரைக்குச் சற்று தொலைவில் அமைந்துள்ள விஸ்வநாதபெரி என்ற கிராமத்துக்கு, சில நண்பர்களுடன் சென்றிருந்தேன். நண்பரின் தந்தையார் பண்னையார் என்பதும், அவருக்கு கிட்டத்தட்ட 200 ஏக்கர் விளைநிலம் இருப்பதும், அங்கு சென்ற பிறகே எங்களுக்கு தெரிய வந்தது. பெரிய பண்ணை வீட்டில் ராஜ உபசாரம், காலாற நடந்து நண்பரது நிலங்களையும், தோட்டங்களையும் சுற்றிப் பார்ப்பது, முதல் கள்ளு, முதல் டிராக்டர் பயணம், பிரிட்ஜ் ஆட்டம், ஒரு சர்க்கரை ஆலைக்கு விசிட், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்த சாஸ்தா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா என்று ஒரு மூன்று நாட்கள் அமர்க்களமாக கழிந்தன!

நண்பருக்கு விடை கொடுத்து, கிராமத்திலிருந்து மதுரை வந்து, சென்னை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன், போக்குவரத்து நெரிசலால், பேருந்து நின்று விட்டது. எப்போதும் போல் நான் பராக்கு பார்த்துக் கொண்டிருந்தேன். சாலையோரத்துக் கடை ஒன்றில் வெள்ளை வேட்டி, கதர் ஜிப்பா அணிந்து, தங்க பிரேம் மூக்குக்கண்ணாடி போட்டிருந்த நடுத்தர வயதுக்காரர் கடையில் வேலை செய்யும் சின்னப்பையனை பார்த்து, "பழைய புக்கா இருந்தாலும், என்ன புக்குனு பார்க்காம இப்படி கிழிக்கலாமா ? இந்த புக்ல என்ன இருக்குன்னு ஒனக்குத் தெரியுமா? பள்ளிக்கூட பசங்க யாருக்காச்சும் குடுக்கலாம்னு இருந்தேன்" என்று திட்டிக் கொண்டிருந்தார். புக்கின் அட்டையில் ராஜா படம் மாதிரி ஏதோ தெரிந்தது.

நெரிசல் நீங்கி பேருந்து சற்று முன்னோக்கிச் சென்றவுடன், ஞாபகத்தில் பொறி தட்டியது. கழுத்தைத் திருப்பிக் கடையை மறுபடியும் பார்த்தேன். "அரசன் வேஸ்ட் பேப்பர் மார்ட்" என்று எழுதியிருந்த சிறிய பலகை கடையில் தொங்க விடப்பட்டிருந்தது கண்ணில் பட்டது!
********************************

என்றென்றும் அன்புடன்
பாலா

இப்பதிவுக்கு அப்போது வந்த மறுமொழிகள்:

பினாத்தல் சுரேஷ் said...
Nalla irunthuthu bala!

10:57 PM, January 24, 2006

Anonymous said...
Bala

It was very good. The rain symbolism reflected the moods of Venu and friends.

Anbudan
Sa.Thirumalai

2:11 AM, January 25, 2006

நிலா said...
nice one

3:43 AM, January 25, 2006

இளவஞ்சி said...
பாலா, அருமையான பதிவு!

சூழ்நிலையின் விவரிப்பும் ஆட்டத்தின் விமரிசனமும் அருமையாக பொருந்திப்போகிறது.

ஒரு செயலை அனுபவித்துச்செய்கிறவனுக்கு அடுத்தவரது அங்கீகாரங்கள் முக்கியமில்லாமல் போகிறது. ம்ம்ம்.. இந்த மண்டைக்கனம் மட்டும் இல்லாமல் இருந்தால்!!

12:30 PM, January 25, 2006

enRenRum-anbudan.BALA said...
சுரேஷ், நிலா
பாராட்டுக்களுக்கு நன்றி.

திருமலை,
ரொம்ப நாள் கழிச்சு ஒரு கமெண்ட் உங்களிடமிருந்து வந்தது குறித்து மகிழ்ச்சி, நன்றி !!!

இளவஞ்சி,
உங்களிடமிருந்து வந்த இந்த பாராட்டு மிகுந்த உற்சாகத்தையும் (ஊக்கத்தையும்) அளிக்கிறது, அடங்கொப்புரானே, சத்தியமாச் சொல்றேன் !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

12:40 PM, January 25, 2006

தெருத்தொண்டன் said...
பாலா, அருமையான பதிவு!

permutations, combinations என்று தலையைப் பிய்க்கும் விஷயங்களைக் கூட சில சாதாரண மனிதர்கள் சாதாரணமாக செய்துவிடுவார்கள் என்பது உண்மைதான். அதே சமயம் அதுகுறித்து அவர்கள் அலட்டிக் கொள்வதும் இல்லை என்பது கூடுதல் சிறப்பு!
நன்றி..பாலா..

12:47 PM, January 25, 2006

கோபி(Gopi) said...
சூப்ப்பருங்க. மறுபடி அந்த 'அரசனை' சந்திச்சீங்களா?

12:49 PM, January 25, 2006

கைப்புள்ள said...
அருமையா விவரிச்சிருக்கீங்க பாலா. திருவல்லிக்கேணியை என்னாலும் என்றும் மறக்க முடியாது. பெரிய தெருவில நிறைய சுத்தி இருக்கேன். ஆனாலும் சாரதி செஸ் கிளப் பத்தி கேள்வி பட்டதில்லை. ஹிண்டு ஹை ஸ்கூலை "ரெட் பில்டிங்"னு தான் நாங்க எல்லாம் கூப்பிடுவோம். நீங்க சொல்லற மாதிரியே ஒரு தாடி காரர் எப்பவும் ரெட் பில்டிங் எதிர்ல் உட்காந்திருப்பார். பல தடவை பார்த்து இருக்கேன். நான் சொல்லற காலம் 1985-1998. ஆனா அவரு செஸ் எல்லாம் விளையாடுவாரா என்னனு தெரியாது..அவரோட பேரும் தெரியாது. எப்பவும் பேப்பரும் ஒரு ரீபில்லும் வெச்சு எதாச்சும் எழுதிட்டே இருப்பார். அப்ப அவர் இளைஞர் கிடையாது...ஒரு 50 வயசு இருக்கும்.

பழைய நினைவுகளை ஞாபகப் படுத்துச்சு உங்க பதிவு. அதோட வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு என்பதையும்.

2:44 PM, January 25, 2006

தேசிகன் said...
பாலா மிக அழகாக எழுதியுள்ளீர்கள்.

3:08 PM, January 25, 2006

enRenRum-anbudan.BALA said...
தெருத்தொண்டன் சார்,
நீங்கள் சொல்வது 100% சரி. பாராட்டுக்களுக்கு நன்றிகள் பல !

கோபி,
திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது ? ரொம்ப நாளா ஆளைக் காணோமே ???

அந்த "அரசனை" மீண்டும் சந்திக்கவில்லை !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

4:15 PM, January 25, 2006

enRenRum-anbudan.BALA said...
கைப்புள்ள அவர்களே,

//அருமையா விவரிச்சிருக்கீங்க பாலா. திருவல்லிக்கேணியை என்னாலும் என்றும் மறக்க முடியாது. பெரிய தெருவில நிறைய சுத்தி இருக்கேன்.
ஆனாலும் சாரதி செஸ் கிளப் பத்தி கேள்வி பட்டதில்லை.
//
முதற்கண் நன்றி. அந்த கிளப் 1980களில், அதாவது நீங்க சொல்ற காலத்துக்கு முன் !!!

//ஹிண்டு ஹை ஸ்கூலை "ரெட் பில்டிங்"னு தான் நாங்க எல்லாம் கூப்பிடுவோம். நீங்க சொல்லற மாதிரியே ஒரு தாடி காரர் எப்பவும் ரெட் பில்டிங்
எதிர்ல் உட்காந்திருப்பார். பல தடவை பார்த்து இருக்கேன். நான் சொல்லற காலம் 1985-1998. ஆனா அவரு செஸ் எல்லாம் விளையாடுவாரா
என்னனு தெரியாது..அவரோட பேரும் தெரியாது. எப்பவும் பேப்பரும் ஒரு ரீபில்லும் வெச்சு எதாச்சும் எழுதிட்டே இருப்பார். அப்ப அவர் இளைஞர் கிடையாது...ஒரு 50 வயசு இருக்கும்.
//
ரெட் பில்டிங் என்ற பெயரை நீங்கள் அறிந்திருப்பது கண்டு மகிழ்ச்சி. நீங்கள் குறிப்பிடும் தாடிக்காரர் எனக்கும் பரிச்சயம் தான் :) தங்கள்
திருவல்லிக்கேணி வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுங்களேன் !!! இப்போது எங்கு இருக்கிறீர்கள் ? (விருப்பம் இருந்தால் கூறவும்).

தேசிகன்,
நன்றி. வசிஷ்டர் வாயால் "பிரம்மரிஷி" !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

4:16 PM, January 25, 2006

J.S.ஞானசேகர் said...
நன்றாக இருக்கிறது.

-ஞானசேகர்

5:02 PM, January 25, 2006

கைப்புள்ள said...
பாலா,
இருக்கற இடத்தை சொல்லறதுக்கு என்ன? இப்போ இருக்கறது இந்தூர், மத்திய பிரதேசம். அங்கே இப்ப திருவல்லிக்கேணி வாழ்க்கை தான்.(புரியலியா?...பாச்செலர் வாழ்க்கை...திருவல்லிக்கேணி பாச்செலர்களின் சொர்க்கம் இல்லியா?) நம்மூரைப் பத்தி எப்படிங்க சும்மா ஒரு பின்னூட்டத்துல சொல்ல முடியும். அதுக்குனு தனியா ஒரு ப்ளாக்கே போடலாம். பெரிய தெருவுல இப்ப ஞாபகத்துக்கு வர்றது...பிள்ளையார் கோயில், ஷண்முகம் நெய் கடை,வசந்தா புக் செண்டர்,CSI ஸ்கூல்,விஸ்வநாத ராவ் டெய்லர்,மாரா நர்சரி...எழுதிட்டே போகலாம். மலரும் நினைவுகள் சார்.

10:54 PM, January 25, 2006

enRenRum-anbudan.BALA said...
ஞானசேகர்,

mikka nanRi !!!

12:33 PM, January 26, 2006

ramachandranusha said...
நல்ல சிறுகதையைப் படித்த உணர்வு. "அரசன்" கேரக்டரை மறக்க முடியாம செஞ்சிட்டீங்க.

12:38 PM, January 26, 2006

enRenRum-anbudan.BALA said...
ஊக்கத்திற்கு நன்றி, உஷா !

//"அரசன்" கேரக்டரை மறக்க முடியாம செஞ்சிட்டீங்க.
//
பின்ன, 'அரசன்'னா சும்மாவா :-)

5:41 PM, January 27, 2006

வசந்தன்(Vasanthan) said...
நல்ல சுவாரசியமான பதிவு.

6:53 PM, January 27, 2006

enRenRum-anbudan.BALA said...
வசந்தன்,
'நல்ல சுவாரசியமான' பின்னூட்டத்திற்கு நன்றி :)

கோபிக்க மாட்டீர்கள் எண்டு நினைக்கிறேன் !!!!

12:21 PM, January 28, 2006

Anonymous said...
nandri bala.thiru allikkeni eppothume buddhisaalikalin iruppidam thaan. avarkal allikeniyaiyum Sri Parthasarathyaiyum marappathillai.nalla sol valam ungalukku.
aththuzhaai.

2:42 PM, January 28, 2006

பத்மா அர்விந்த் said...
முடிவை எதிர்பார்க்கவில்லை. அருமையாக இருந்தது. பீர்பாலின் கதை ஒன்றில் அரசனின் அகந்தையை போக்க அரசியின் தம்பி வந்து விளையாடுவது போலவும், விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்பதியும் சொல்லியிருந்த கதை நினைவுக்கு வந்தது. அதில் சம்பவங்கள் முற்றிலும் வேறு.

6:38 PM, January 28, 2006

enRenRum-anbudan.BALA said...
பத்மா,
ரொம்ப நாள் கழித்து வருகை தந்துள்ளீர்கள் !!! பாராட்டுக்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் பல.
என்றென்றும் அன்புடன்
பாலா

11:10 PM, January 28, 2006

star6. காந்தி யாருக்குத் தேவை ?

K P Fabian என்பவர் எழுதிய ஒரு கட்டுரையின் சில பகுதிகளை தமிழாக்கம் செய்து தந்திருக்கிறேன்.
*********************************
காந்தியைப் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பேசும்போது, 'இவரைப் போல் ரத்தமும் சதையுமாக ஒருவர் இப்பூமியில் உலவினார் என்பதை வருங்கால சந்ததியினர் நம்பத் தயங்குவார்கள்' என்கிறார்! உலகத்தின் தலை சிறந்த விஞ்ஞானியின் காந்தி குறித்த ஆச்சரியமும், மரியாதையும் இந்தியர்களாகிய நம்மிடமும் உள்ளதா ?
Photo Sharing and Video Hosting at Photobucket
இந்தியர்களில் பலர், பொருளாதாரச் சீரமைப்பு மற்றும் உலகமயமாக்கலை முன்னிறுத்தும் இன்றைய இந்தியாவில் காந்திக்கும் அவர்தம் கோட்பாடுகளுக்கும் எவ்வித இடமும் இருப்பதாகக் கருதுவதில்லை! 8% GDP வளர்ச்சியுடன் ஒரு பொருளாதார வல்லரசாக மாறி வரும் இன்றைய இந்தியா, காந்தி என்பவர் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் ஒரு வரலாற்று குறிக்கோளுக்காக வாழ்ந்து மறைந்தவர் என்பது தவிர, காந்தியையும், காந்தியத்தை எண்ணிப் பார்ப்பதால் எந்தப் பயனும் இல்லை என்று நம்புகிறது.

இந்தியாவின் தற்போதைய நிலையைப் பார்ப்போம். தற்போது பல இந்தியாக்கள் உள்ளன! ஒரு ஆளும் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு வரவழைக்க இயலாத "ஜொலிக்கும் இந்தியா" (Shining India), அன்னியச் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்க "அபார இந்தியா" (Incredible India), உலகளவில் பேசப்படும், எண்ணிக்கையில் முன்னேறி வரும், பெரும்பணக்காரர்களை உடைய "பணக்கார இந்தியா" என்று சில உள்ளன. இவை தவிர, அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மைத் துறைகளில் பிரகாசிக்கும் "அறிவுஜீவி இந்தியா", "எழுச்சி மிகு இந்தியா", "சென்சக்ஸ் இந்தியா" என்று மொத்தத்தில் பல இந்தியாக்கள் நிலவுகின்றன!

எந்த இந்தியாவை நம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது ? சரியானதை தேர்வு செய்ய (நாம் ஒரு ஜனநாயகமாக இருப்பதால்!), நமது பெரும்பான்மையான மக்களின் நிலையை நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது! நாளை இந்தியா யு.என். பாதுகாப்புக் கவுன்சிலில் ஒரு நிரந்தர உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்பட்டால், அதனால் இந்தப் பெரும்பான்மை இந்தியர்களின் வாழ்வில் என்ன மாற்றம் ஏற்பட்டு விடும் ? அர்ஜுன் சென்குப்தா கமிஷன் அறிக்கையின்படி, ஒழுங்கற்ற பணித்துறையில் (unorganized job sector), 77 சதவிகித மக்கள் நாளொன்றுக்கு 20 ரூபாய் சம்பளத்தில் வாழ்கின்றனர். மிக அடிமட்டத்தில், 7 கோடி மக்கள், ஒரு நாளைக்கு 9 ரூபாயில் வாழ்கின்றனர்!

யு.என். பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு நிரந்தர உறுப்பினராக இந்தியா ஆக வேண்டிய அவசியமில்லை என்பதை வலியுறுத்தக் கூறிய ஒரு வாதமாக இல்லாமல், நாம் கவனிக்கத் தவறிய ஒரு முக்கியப் பிரச்சினையை முன்னிறுத்தவே இவ்வாறு கூற வேண்டியுள்ளது. இந்தியா யு.என். பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு நிரந்தர உறுப்பினராக ஆனால், மேற்கூறிய மக்களுக்கு "பாதுகாப்பான" குடிதண்ணீர் கிட்டுமா என்ன?

நாம் சுட்டிக்காட்டும் இந்த 83.6(77%) கோடி மக்கள் டிவி சேனல்களின் SMS சர்வேக்களில் கலந்து கொள்வதில்லை! இருப்பினும், நம்மை ஒரு ஜனநாயக நாடாக அறிவித்துக் கொண்டதால், இந்த 77 சதவிகித மக்களின் கருத்துகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டியிருக்கிறது. இங்கு தான் 1948-இல் காந்தி (அரசுத் துறைகளில், பொதுக் கொள்கைகளுக்கு திட்ட வடிவம் தரும் நபர்களுக்கு ஓர் அறிவுரையாக) கூறிய பேருண்மை வாய்ந்த சொற்களை நினைவு கூர்வதும், அவற்றை அந்த 83.6 கோடி மக்களுக்கு எடுத்துரைப்பதும் அவசியமாகிறது!

"ஒரு கொள்கை குறித்து உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டாலோ, சுயம் உங்களை ஆக்ரமிக்க தலைப்பட்டாலோ, ஒரு தேர்வுக்கு உங்களை ஆட்படுத்துங்கள். நீங்கள் சந்தித்ததிலேயே, ஏழ்மையால் மிகவும் பீடிக்கப்பட்ட அந்த மனிதனின் முகத்தை நினைவு கூர்ந்து உங்களையே கேள்விகள் கேட்டுக் கொள்ளுங்கள், 'நீங்கள் எடுக்கும் முடிவால், அந்த மனிதனுக்கு ஏதாவது பயனுண்டா? உங்கள் முடிவு அம்மனிதனது வாழ்வையும் விதியையும் அவனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஏதாவது வகையில் உதவுமா? உங்கள் முடிவு, வயிற்றுப்பசியிலும், அறிவுப் பசியிலும் வாடும் பல கோடி மக்களுக்கு அவற்றிலிருந்து விடுதலை பெற்றுத் தருமா?' மெல்ல உங்கள் ஐயங்களும், சுயமும் தானாகவே உருகிப் போய் விடும்"

அம்மக்களிடம் மேலும் கூறுவோம்: இதுவரை தொடர்ந்து ஆட்சி செய்த அரசுகளும், உயர் அரசு அலுவலர்களும், வறுமை ஒழிப்புத் திட்டங்களை வடிவமைத்தபோது, காந்தியின் வார்த்தைகளை மனதில் கொண்டு செயல்பட்டிருந்தால், நம் நாட்டின் முகம், வறுமையால் பீடிக்கப்பட்டு, இன்று இத்தனை கோரமாக காட்சியளிக்காது!

இவற்றையெல்லாம் கேட்டு அம்மக்களின் எதிர்வினை என்னவாக இருக்கும் ?

சரி, மீதமுள்ள 23 சதவிகித மக்களுக்கு காந்தியின் தேவை உள்ளதா ? உள்ளது!

எப்படி, நமது ஜனநாயகத்தின் தரம் மிகவும் தாழ்ந்து விட்டது. சமூக விரோதிகள், மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டி வெற்றி பெறுகின்றனர், நாட்டைச் சுரண்டும் கொள்ளைக்காரர்கள் எப்படியோ தண்டனையிலிருந்து தப்பி விடுகிறன்றனர்! பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும், உறுப்பினர்களின் 'திட்டமிட்ட' குறுக்கீடுகளால் விவாதங்களில் தொடர்ந்து தடங்கல் ஏற்பட்டு, மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பேச வேண்டிய பொன்னான நேரம் தாராளமாக வீணடிக்கப்படுகிறது. மேற்கூறியவை பற்றிக் கவலைப்படுபவர்களுக்கு காந்தியின் தேவை உள்ளது! காந்தி பொதுவாழ்விலும், அரசியலிலும், மதிப்புக்கு உரிய கோட்பாடுகளை போதித்ததோடு, அவற்றை கடைபிடிக்கவும் செய்தார்!

நாமெல்லாம் உண்மையானவராகவும், அச்சமில்லாதவராகவும், லட்சியவாதிகளாகவும், அகிம்சாவாதிகளாகவும் இருக்க வேண்டிய அவசியத்தை காந்தி வலியுறுத்தினார். இன்றைய சூழலில் கூட, சில மாற்றங்களைச் செய்வதன் மூலம், காந்தியின் பொருளாதாரத் தத்துவத்திற்கு (திட்டங்களாக) செயல் வடிவம் தர முடியும்! இன்றைய வன்முறைச் சூழலைப் பார்க்கும்போது, காந்தி சொன்ன ... கண்ணுக்குக் கண் என்பது ஒரு கட்டத்தில் உலகத்தையே குருடாக்கி விடும் ... என்பதை நினைவு கூர்வது அவசியமாகிறது.

ஆகவே, நல்லதோர் இந்தியாவை (ஏன், உலகத்தை) விரும்பும் அனைவருக்கும் காந்தி என்பவர் தேவையாகிறார்! மேலும், காந்தி இன்று நம்மிடையே இருந்திருந்தால், தீவிரவாதம் இந்த அளவுக்கு நிச்சயம் தலை விரித்து ஆடாது என்று ஓர் எண்ணம் தோன்றுகிறது. ஒவ்வொரு பிரச்சினைக்கும், காந்தியத் தீர்வு என்று ஒன்று இருப்பதாக வாதிடுவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல! காந்தியத்தில் பல நல்ல விஷயங்கள் உள்ளன, அவற்றைப் புரிந்து கொள்வதும், கடைபிடிப்பதுமே நாம் காந்திக்கு செய்யும் அஞ்சலி, அவரை வழிபடுவதின் மூலம் அல்ல !

காந்தியே சொன்னது போல, "இவ்வுலகத்திற்கு போதிக்க என்னிடம் எதுவும் இல்லை! உண்மையும், அகிம்சையும், இவ்வுலகில் உள்ள மலைகளைப் போல் பழமையானவை!"
**************************

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

P.S:

காந்தி சொன்ன ஏழு கொடும்பாவங்கள்:

1. உழைப்பால் ஈட்டாத செல்வம்


2. மனசாட்சிக்கு புறம்பான இன்பம்

3. மனிதத்தை முன்வைக்காத அறிவியல்

4. நற்குணம் சாரா ஞானம்

5. கோட்பாடில்லா அரசியல்

6. ஒழுக்கமில் வணிகம்

7. தியாகம் அறியா வழிபாடு

Monday, December 03, 2007

Star5. போபால் விபத்தில் பலியான அப்பாவிகளுக்கு ஓர் அஞ்சலி!

இன்றோடு 23 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. தமிழ் இணையத்தில் இன்று எழுதும் பல இளைஞர்கள் இது பற்றிய முழு விவரங்கள் அறிந்திருப்பார்களா என்பது கூட சந்தேகமே.

1984 ஆம் ஆண்டின் டிசம்பர் 3 அதிகாலையில் யூனியன் கார்பைட் தொழிற்சாலையிலிருந்து கசிந்த 40 டன் மித்தைல் ஐஸோசயனேட் ( Methyl Isocyanate) என்கின்ற விஷ வாயு கிட்டத்தட்ட 2500 முதல் 5000 பேர் ஒரே இரவில் பிணக் குவியலாக மாற்றிய தினம் இது.(8 லட்சம் பேர் வசித்தனர் போபாலில் அப்போது)





<

மேலும் 20000 பேர் படிப்படியாக இதன் தாக்கத்தால் பாதிக்கப் பட்டு மடிந்தனர் மற்றும் 2 லட்சம் பேர் இந்தக் கசிவால் பாதிக்கப் பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இன்றும் கூட மருத்துவமனைகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் பார்வைக் கோளாறு,நுரையீரல் கோளாறு,சிறுநீரகக் கோளாறு, மலட்டுத்தன்மை,நோய் எதிர்ப்பு சக்தியின்மை போன்ற வியாதிகளால் அவதிப்பட்டு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்தியாவில் காசநோய் உள்ளவர்களது சராசரியை விட நாலு மடங்கு அதிகம் சராசரி போபாலில் இன்றளவும் நிலவுகிறது




யூனியன் கார்பைடு கம்பனி மீதான கிரிமினல் வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை.ஏனென்றால் அந்தக் கம்பெனியே தலை மறைவானதும் அதற்கெதிராக இந்திய அரசு வலுவாக செயல் படாததும் ஒரு புறமென்றால் அந்த கம்பனியை 'டோவ் கெமிகல்ஸ்' என்ற கம்பெனி வாங்கி , இந்தியாவில் மேலும் முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதும், அம்பானியின் ரிலையன்ஸ் அவர்களுடன் கை கோர்ப்பதும், ரத்தன் டாடா போன்றோர் ஆதரவு தருவதும் என்னவென்று சொல்ல?

யூனியன் கார்பைடின் அப்போதைய தலைவராக இருந்த வாரன் ஆண்டர்சன் இன்றும் அமெரிக்காவில் சுக வாழ்வு வாழ்கிறார்.விஷ வாயு (இரசாயன)ஆயுதங்கள் வைத்திருப்பதாக சந்தேகப் பட்டதின் பேரிலேயே ஈராக் நாட்டையே துவம்சம் செய்து சதாமை தூக்கிலேற்றியும் ஓயாத அமெரிக்கா வாரன் ஆண்டர்சனை விசாரணைக்காக இந்தியாவிற்கு அனுப்ப மறுத்தது எந்த ஊர் நாட்டாமையோ தெரியவில்லை.

இந்தியா கல்கத்தா டெஸ்டில் ஜயிக்குமா ஜயிக்காதா , நடிகை காவேரியை காமெரா மேன் வைத்தி ஏமாற்றினாரா இல்லையா என பதை பதைக்கும் ஊடகங்களுக்கு போபால் பற்றி அந்த நிகழ்வு, நினைவு, சோகம் மற்றும் படிப்பினை பற்றி கூற இரண்டே இரண்டு நிமிடம் ஒதுக்க முடியவில்லை.ஏனென்றால் 23 வருடங்களுக்கு முன் இழந்த 22000 உயிர்கள் அவ்வளவு சுவாரசியமில்லை.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போன்ற விஷயம் "டோவ் கெமிகல்ஸ்" கம்பெனியின் சட்டவல்லுனர் அபிஷேக் மான் சிங்வி தான் போபால் விஷ வாயு கசிவிற்கு பிறகு அது சம்மந்தமாக பிரதம மந்திரி அலுவலகத்திற்கு அன்று சட்ட ஆலோசனைக் குறிப்புகள் கொடுத்தவர். ( இவர்களுக்கெல்லாம் மனிதாபிமானம் என்ற ஒன்றே கிடையாதா...எல்லாமே பணம் மட்டும்தானா ? )

இத்தனையிலும் ஒரு ஆறுதலான விஷயம் சென்னை மற்றும் மும்பை IIT மாணவர்கள் மனிதாபிமான அடிப்படையில் "டோவ் கெமிகல்ஸ்" வேலையை புறக்கணித்ததுமல்லாமல் அவர்களை கல்லூரி வளாக தேர்வுக்கும் வரவொட்டாமல் தடுத்து விட்டனர்.கான்பூர் ஐ ஐடியிலும் இது போன்றதொரு நடவடிக்கை பரிசீலிக்கப் படுவதாகவும் தெரிகிறது.

மனித வரலாற்றின் மிக மோசமான தொழிற்சாலை விபத்தில் பலியான 22000 உயிர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தும் அதே வேளையில் இது போன்ற துயரங்கள் மேலும் நடவாமலிருக்க நம்மால் இயன்றதை செய்வோம் என்று இந்த நாளில் உறுதி கொள்வோமாக.

star4. அணுசக்தி ஒப்பந்தம் - உரத்த சிந்தனைகள்

123 ஒப்பந்தம் தொடர்பான இடதுசாரி (நந்திகிராம் பிரச்சினையைத் தொடர்ந்து சற்று தடம் புரண்டுள்ள) எதிர்ப்பும், பிஜேபியின் நிலையும், காங்கிரஸின் இரண்டுங்கெட்டான் நிலைமையும் அனைவரும் அறிந்தது தான். சோனியா அம்மையார் சமீபத்தில் திருவாய் மலர்ந்து, "இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள், நாட்டின் வளர்ச்சிக்கு எதிரிகள்" என்று கூறியதை அடுத்து, ஒரு புள்ளி விவரத்தை ஆராய்வது அவசியமாகிறது.

ஆகஸ்ட் 2006 திட்டக் கமிஷன் அறிக்கை ஒன்று, 2031-32 வரை இந்தியாவின் ஆண்டொன்றுக்கான 8 சதவிகித GDP தொடர் வளர்ச்சிக்கு அவசியம் என்று கருதும் 11 வகை எரிபொருள் கலப்புகள் (Fuel Mix) தரவல்ல சாதக/பாதகங்கள் குறித்துப் பேசும்போது, இன்றிலிருந்து 2031-32 வரை இந்தியாவின் அணுசக்தித் திறன் 20 மடங்காக உயர்ந்தாலும் நாட்டின் மொத்தத் தேவையில் அணுசக்தியின் பங்கு 4-6.4% மட்டுமே என்று தெளிவாக குறிப்பிடுகிறது. இந்திய அணுசக்திக் கழகத்தின் தலைவரான அனில் ககோத்கரும் இவ்வறிக்கை தயாரித்த குழுவில் இடம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது!

அதாவது, அணுசக்தி எக்காலத்திலும் நம் நாட்டின் எனர்ஜி தேவைகளுக்கு தீர்வாகாது என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் காங்கிரஸ் கட்சியும், பிரதமரும் 123 ஒப்பந்தம் ஒன்றே நம் நாட்டின் நெடுங்கால மின்சக்தி பற்றாக்குறைக்கு ஒரே தீர்வு என்று கூறுவது பொதுமக்களை ஏமாற்றும் தந்திரோபாயம் அன்றி வேறென்ன? உண்மையில் பாதுகாப்புத் தொடர்பான நமது அணுசக்தி சுதந்திரத்தை அமெரிக்காவிடம் அடகு வைக்கும் முயற்சி இது என்பது தெளிவு! அமெரிக்காவுடன் பெரியண்ணன்-தம்பி வகை உறவு நமக்கு நிச்சயம் தேவையில்லை.

ஒப்பந்தத்திற்கு எதிரான கருத்துக்களை (குறிப்பாக, Hyde Act பற்றிய சந்தேகங்களை) அரசு நேர்மையாக ஆராயாமல் இருப்பதும், பிரதமர் ஒப்பந்தத்தை விட்டுக் கொடுக்காமல் பேசி வருவதும், ஒப்பந்தம் நிறைவேறாமல் போவதை தனது தனிப்பட்ட தோல்வியாக பிரதமர் கருதுவதால் இருக்கலாம். சமீபத்தில் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் கூட, பிரதமர் பங்கு கொண்டு எதுவும் கூறாதது, சிறுபிள்ளைத்தனமான பிடிவாதமாகத் தான் தோன்றியது.

போக்ரான்-II வாயிலாக இந்தியாவை அணுசக்தி நாடாக அறிவித்த பிஜேபியை, ஒப்பந்தத்திற்கு ஆதரவாக (பிஜேபியின் இடதுசாரி கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை சாமர்த்தியமாக பயன்படுத்தி) இட்டு வர மறைமுக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவின் அமெரிக்கத் தூதர் முல்போர்ட், சமீபத்தில் அத்வானியை சந்தித்தது குறிப்பிட வேண்டியது.

சமீபத்தில், 123 ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்கு வகித்த நிக்கோலஸ் பர்ன்ஸ், "இன்னும் 20-30 ஆண்டுகள் கழித்து, பல அமெரிக்கர்கள், அமெரிக்காவின் இரண்டு அல்லது மூன்று முக்கியக் கூட்டாளிகளில் ஒன்றாக இந்தியாவையும் (ஜப்பான், யுரோப்பிய கூட்டமைப்பு போல) கருதுவார்கள்" என்று கூறியிருப்பது அமெரிக்க நோக்கத்தை தெளிவாக்குகிறது! இந்த ஒப்பந்தம் மூலம், தனக்கான சாதக/பாதகங்கள் குறித்து அமெரிக்கா தெளிவாகவே உள்ளது. ஆனால், நம் அரசோ, ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்களுடன் அனாவசிய சச்சரவு செய்து கொண்டும், வீட்டுக் கணக்கையும் சரிவரச் செய்யாமலும், எப்படியாவது ஒப்பந்தத்தை நிறைவேற்றி, அமெரிக்காவின் அடிவருட அலை பாய்கிறது!

அப்படியே அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தாலும், அணு ஆலைக்கு பொருட்களை விற்கும், பெரும்பாலும் தனியார் வசம் உள்ள, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கு அவற்றை விற்பனை செய்ய முன் வர மாட்டார்கள். ஏனெனில், அணு ஆலையில் விபத்து ஏற்பட்டும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்க்கு நஷ்ட ஈடு என்று வரும்போது, அந்த நிறுவனங்கள் பெரும்பாதிப்புக்கு (யூனியன் கார்பைட் விவகாரம் போல) உள்ளாகும் சூழல் நிலவுகிறது. இந்தியாவில், அம்மாதிரி நஷ்ட ஈடுக்கு உச்சவரம்பை நிர்ணயிக்கும் சட்டம் இயற்றப்படவில்லை. ஆனால், அரசு கட்டுப்பாட்டில் உள்ள ரஷிய நிறுவனங்களுக்கு அந்தப் பிரச்சினை இல்லை என்றே கூறலாம். அதனால், ரஷிய நிறுவனங்களே, பெரும்பான்மையான இந்திய அணுசக்தி காண்ட்ராக்டுகளை வெல்ல வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆகவே, கம்யூனிஸ்ட்கள் 123 ஒப்பந்தம் குறித்து அவ்வளவு டென்ஷன் ஆக வேண்டியதில்லை :)

என்றென்றும் அன்புடன்
பாலா

Star3. நரேந்திர மோடி, தெஹல்கா, குஜராத் தேர்தல் ...

சமீபத்தில் தெஹல்கா, கோத்ரா ரயில் எரிப்பு விவகாரத்தைத் தொடர்ந்து நடந்தேறிய வன்முறை பற்றி பிஜேபி மற்றும் விஹெச்பி பிரமுகர்கள் சிலர் பேசிய பேச்சை (அவர்களுக்குத் தெரியாமல் கேமராவில் படம் பிடித்து) அம்பலப்படுத்தியுள்ளது. வன்முறையின் போது, அரசு நடவடிக்கைகளின் மெத்தனம் குறித்தும், பின் குற்றவாளிகளை காப்பாற்ற அரசே முனைந்தது பற்றியும் சந்தேகங்கள் நிலவி வந்தாலும், இப்போது தெஹல்கா வாயிலாக மாநில அரசு வன்முறைக்கு துணை போனது உண்மை தான் என்பது நிரூபணமாகி விட்டது!

மோடி குறித்த 'புரிதல்' இல்லாதவருக்கு வேண்டுமானால், தெஹல்கா செய்த அம்பலம் ஆச்சரியத்தைத் தரலாம். ஏதோ தீவிரவாதிகளை வேட்டையாடியது போல, பெண்களையும், முதியவர்களையும் வெட்டிச் சாய்த்தது குறித்து அந்த 'வீடியோ' கனவான்கள் பெருமையாக பேசியிருப்பதைக் கேட்டபோது, மனது கனத்துப் போனது. என்ன மாதிரி ஜந்துக்கள் இவர்கள் :(

முதல்வர் மோடி, வீடியோவில் தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டவர்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று (குறைந்த பட்சம்) மறுப்பு தெரிவிக்காமல், தெஹல்கா டேப்பை ஒளிபரப்பிய சேனல்களை இருட்டடிப்பு செய்ததின் மூலம், கோரமான உண்மையை மூடி மறைக்க முடியுமா? அவரின் இந்தச் செயல் கடும் கண்டனத்துக்குரியது. அது போலவே, குஜராத் தேர்தலுக்கு முன் தெஹல்கா இதை வெளியிட்டதற்கு காங்கிரஸை குற்றம் சாட்டி அரசியல் நோக்கம் கற்பிப்பதில் எந்த அர்த்தமும் இருப்பதாகத் தோன்றவில்லை.

பொதுவாக, அரசியல்வியாதிகள், நம்பிக்கைக்குரிய ஆட்களிடமே, தாங்கள் செய்த குற்றங்கள் பற்றிப் பேச / ஒப்புக்கொள்ளத் தயங்குவார்கள். ஆனால், இவ்விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தங்களது வன்முறையை பெருமைக்குரியது போல பீற்றிக் கொண்டதுக்கு காரணமாக நான் நினைப்பது, குஜராத்தில் இஸ்லாமிய வெறுப்பு என்பது அரசியல் ஆதாயம் (அதாவது தேர்தலில் ஓட்டுகளாக) பெற்றுத் தரும் விஷயமாக கருதப்படுவது தான்! மோடி கூட, அதே காரணத்தால் தான், தெஹெல்கா வீடியோ பேச்சுகளுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஒரு பேச்சுக்குக் கூட மறுப்பு தெரிவிக்கவில்லை!

நம் சமூக வரலாற்றில், இது போன்ற வன்முறை நிகழ்வுகள் விரவிக் கிடக்கின்றன! 1989-இல் நடந்த பகல்பூர் வன்முறை குறித்த வழக்கு தற்போது தான் முடிவடைந்து, பேருக்குச் சிலரே தண்டனை பெற்றுள்ளனர். 1984-இல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையில் நேரடியாக ஈடுபட்ட பலர், இன்று உயர் அரசியல் பதவிகளில் உள்ளனர்! 1993 மும்பை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து நடந்தேறிய வன்முறை தொடர்பான வழக்கு முடிவடைய 14 ஆண்டுகள் ஆனதற்குக் காரணம் மகாராட்டிரத்தில் ஆட்சி செய்த மாநில அரசுகள் (காங்கிரஸையும் சேர்த்து) தான் என்றால் அது மிகையில்லை!

தெஹல்கா வீடியோ ஆதாரத்தை வைத்து யாராவது வழக்கு தொடர்ந்து அதன் முடிவில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை! அதற்கு எவ்வளவு காலம் ஆகுமோ? வழக்கை நீர்த்துப் போக வைக்க என்னென்ன முயற்சிகள் செய்யப்படுமோ? ஏன் காங்கிரஸே கூட வழக்கு தொடரலாமே? ஆனால், செய்ய மாட்டார்கள்! சமீபத்தில் பிஜேபியிலிருந்து காங்கிரசுக்குத் தாவியவர்கள் பலர் மீது குஜராத் வன்முறைக்கு துணை போனதாக குற்றச்சாட்டு இருக்கிறது!

2002 வன்முறைக்குப் பின், மோடி தன்னை ஒரு புது மனிதராகக் காட்டிக் கொள்ள ஓரளவு முயற்சி எடுத்திருக்கிறார் என்பதும் உண்மையே. சிறப்பான நிர்வாகத்தின் மூலம், திட்டங்கள் மூலம், மோடி மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டு சென்றிருப்பினும், அவரது கடந்த காலம் அவரை விடாமல் துரத்துகிறது! யாரும் அந்த கொடிய வன்முறையை மறக்கவும், மோடியை மன்னிக்கவும் தயாராக இல்லை! 'Gujarat shining' கோஷத்தோடு, பாதுகாப்பு மற்றும் தீவிரவாதம் குறித்த நடுத்தர இந்துக்களின் அச்சங்களையும் வரும் தேர்தலில் மோடி தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்.

மேலும், மோடியின் சந்தேகமற்ற இந்து சார்பு நிலையே, பல NRI குஜராத்திகள் அம்மாநிலத்தில் பெருமளவு முதலீடு செய்வதற்கு முக்கியக் காரணம் என்று என் குஜராத்தி நண்பன் திட்டவட்டமாக கூறுவது சிலருக்கு ஆச்சரியம் அளிக்கலாம்.

அது போலவே, குஜராத் தேர்தலில் மோடி வென்று மீண்டும் ஆட்சிக்கு (தெஹல்காவையும் மீறி!) வரக் கூடிய சாத்தியம் இருப்பதாகவே தெரிகிறது! ஏன், மோடி மீண்டும் ஆட்சிக்கு வர தெஹல்கா விவகாரம் உதவியாகக் கூட இருக்கலாம்! ஏனெனில், ஏற்கனவே இந்து-முஸ்லிம் என்று பிளவுபட்டுக் கிடக்கும் மாநிலத்தில், இது போன்ற விஷயங்கள் மூலம் polarization அதிகரிப்பது மோடிக்கு சாதகமாகவே அமையலாம்.

இம்முறை காங்கிரசும், தங்கள் வாக்குகள் சிதறிப் போய் விடக் கூடாது என்ற எண்ணத்தில் தான், (சென்ற முறை போல் ஆகி விடாமல் இருக்க) NCP-யுடன் கூட்டணி வைத்துள்ளது. அது போலவே, பிஜேபியிலிருந்து விலகி வந்தவர்களுக்கும் நேசக் கரம் நீட்டியுள்ளது. படேல் சமூகத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களை அரவணைத்து, காங்கிரஸ் பலருக்கு சீட்டு கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மகாத்மாவின் சத்யாகிரக இயக்கத்தின் நூறாவது ஆண்டு நிறைவுத் தீர்மானத்தை, சமீபத்திய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியது கூட குஜராத் தேர்தலை முன்னிட்டுத் தான். குஜராத் வன்முறையால் உண்டான பிரிவினைச் சூழல் மாறுவதற்கு காந்தி போதித்த இந்து-முஸ்லிம் சகோதரத்துவம் உதவுமா என்பதற்கான விடை தேர்தல் முடிவுகளில் தெரிய வரும்!

அகிம்சாவாதி மகாத்மா பிறந்த புண்ணிய பூமி இம்மாதிரி அவலச் சூழலில் சிக்கிக் கிடப்பது தான் பெரிய கொடுமை, வேறென்னத்தச் சொல்ல!

Star2. தீவிரவாதம் தின்ற இளைஞன்

சென்ற வருடம் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி, தலையில் அடிபட்டு, பெரும் உயிர் போராட்டத்திற்குப் பின் உயிர் பிழைத்த அமித் என்ற 21 வயது இளைஞரைப் பற்றியது இப்பதிவு! அவர் கடந்த ஒரு வருடமாகவே சுயநினைவு அற்ற நிலையில் (ஒரு வித கோமா நிலையில்), மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவமனையில் (வசூல் ராஜா MBBS திரைப்படத்தில் இவரைப் போல ஒரு கதாபாத்திரத்தைப் பார்த்திருப்பீர்கள்), தனது பெற்றோர் மற்றும் சகோதரரால் பேணப்பட்டு, உடல்நிலையில் முன்னேற்றம் அதிகம் இன்றி, வீல்சேரிலும் படுக்கையிலும் தன் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். விபத்திற்கு முன் ஒரு சிறந்த வாலிபால் ஆட்டக்காரராக இருந்த இவருக்கு, இப்போது மருத்துவமனை அறையே வாழ்க்கையாகி விட்டதற்கு காரணம் தீவிரவாதம் என்ற நம் நாட்டை பிடித்து ஆட்டும் கொடுநோய்!
Photo Sharing and Video Hosting at Photobucket
என்றாவது ஒரு நாள் தன் மகன் பூரண குணமடைந்து விடுவான் என்ற (ஒரு தாய்க்கு மட்டுமே உரிய) முழு நம்பிக்கையில், மீனா சிங் தன் மகனை ஒரு குழந்தையைப் போல் பேணி, அவரது செயலிழந்த / பலம் குன்றிய கை கால்களை தினமும் நீவி, நாள் முழுதும் அவருடனே இருந்து பணிவிடை செய்கிறார். மருத்துவர்கள் அமித்தின் நிலையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறி வந்தாலும், அந்த தாய் ஏதாவது அதிசயம் நிகழ்ந்து நல்லது நடக்கும் என்று திடமாக நம்புவது நம்மை அசர வைக்கிறது.

அமித்திடம் செயல், பேச்சு எதுவும் இல்லாவிட்டாலும், தாங்கள் பேசுவதை அவன் புரிந்து கொள்கிறான் என்று அமித்தின் குடும்பத்தினர் நம்புகின்றனர். அமித்தின் ஆகாரம் முழுதும் குழாய் வழியாகத் தான். தனது இளைய மகனின் நிலைமையால் மனதளவில் உடைந்து போயிருக்கும் அவனது தந்தை தினேஷ் சிங், அமித் உடல் நிலையில் ஏதாவது முன்னேற்றம் ஏற்படாதா, அவனுக்கு சுயநினைவு திரும்பாதா என்ற ஆதங்கத்தில், யாரோ பரிந்துரைத்த ஆயுர்வேத எண்ணெயை தினமும் அமித்தை நுகர வைத்துப் பார்க்கிறார்!

ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி புரியும் அமித்தின் மூத்த சகோதரர், வாரத்தில் 5 நாட்கள், இரவுப் பொழுதுகளை தன் தம்பிக்கு துணையாக மருத்துமனையில் கழித்து வருகிறார். வாரம் ஒரு முறை தான் வீட்டுக்கே செல்கிறார். அந்த குடும்பத்தினரின் வாழ்க்கையே அந்த மருத்துவமனையுடன் பிணைந்து விட்டது. அமித் ஒரு கணம் கூட தனிமையில் இல்லாதவாறு பார்த்துக் கொள்வதற்கு, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அக்குடும்பத்தினர் படும் பாடும், அவர்களின் வேதனையும்,வலியும் நம்மை கலங்க வைக்கிறது.
Photo Sharing and Video Hosting at Photobucket
"எங்களுக்குப் பின் யார் அவனை இப்படி பார்த்துக் கொள்வார்கள்" என்று அவனது தந்தை கண்ணில் நீர் மல்க, பரிதாபமாகக் கேட்கும்போதும், அமித்தின் தாய் மீனா, "எங்களுக்கு கடவுள் செய்தது போல், வேறெந்த பெற்றோருக்கும் ஏற்படக் கூடாது" என்று கூறும்போதும், அவர்கள் குரலில் தென்படும் கவலையும், சோகமும் நம்மை உருக்குவதாக உள்ளது.

எல்லா நடுத்தர குடும்பங்களை போல, அக்குடும்பத்திற்கும் இருந்த கனவுகள், ஒரு ஜூலை மாத மாலை வேளையில், தீவிரவாதத்தின் பிடியில் சிக்கி சிதறடிக்கப்பட்டு விட்டன! ஆனால், அப்பெற்றோர், தீவிரவாதிகள் குறித்தோ, வழக்கு இதுவரை தொடங்காதது பற்றியோ அக்கறை எதுவும் காட்டுவதில்லை. அப்பெற்றோரின் வாழ்வில் மிச்சமிருப்பதெல்லாம், தங்கள் இளைய மகன் ஒரு நாள் உடல் நலம் பெற்று எழுந்து விடுவான் என்ற தளராத நம்பிக்கை மட்டுமே !

நாமும் நம்புவோம், பிரார்த்திப்போம்!

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி: rediff.com

Star1. எனது நட்சத்திர வாரம் பற்றி

தமிழில் வலை பதியத் தொடங்கி ஒரு மூன்றரை ஆண்டுகள் கழித்து தமிழ்மண நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளது :) நட்சத்திர வாரத்தின்போது தினமும் ஒரு பதிவாவது இட வேண்டும் என்று எழுதப்படாத சட்டம் நிலவுவதும் தெரியும்!

என் இவ்வாரப் பதிவுகளில் ஸ்பெஷலாக எல்லாம் எதுவும் இருக்காது. எப்போதும் எழுதுவது போல எனக்கு நெருக்கமான விஷயங்களும், சில நிகழ்வுகள்/பிரச்சினைகள் குறித்த கண்ணோட்டமும் பதிவுகளில் காணப்படும். இந்த வாரம், அரசியல், சமூகம், ஆன்மீகம், தொழில்நுட்பம் என்று கலந்து கட்டி பதிவுகள் வரும். புதிய பதிவர்களுக்காக, கொஞ்சம் அரைத்த மாவையும் அரைக்க (மீள் பதிவுகள் இட) உத்தேசம்!

அறிவுஜீவித்தனமாக எதுவும் எழுத மாட்டேன்! (யாரும் பயப்படத் தேவையில்லை;-)) என்னிடம் இருக்கும் சரக்கை வைத்து ஜீவிக்க (சுவாசிக்க!) எல்லாம் முடியாது, ஏதோ ஜீவனம் தான் பண்ண முடிகிறது என்பதால் :) "மூத்த" (வயதில் அல்ல!) பதிவர் என்ற பட்டத்துக்கு பங்கம் வராதவாறு இந்த நட்சத்திர வாரத்தை ஒரு மாதிரி ஒப்பேற்றி விடவே உத்தேசம் :)

எனது இவ்வாரப் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட இயலாத வாசகர்கள், குறைந்தபட்சம் தமிழ்மணப் பட்டையில் உள்ள "+"ஐ அமுக்கி விட்டுச் செல்லவும் ?! ஏனெனில், "-"ஐ அமுக்குவதால் எந்தப் புண்ணியமும் இல்லை, எனது இவ்வாரப் பதிவுகளின் சுட்டிகளுக்கு (இந்த வாரம் முழுதும்) தமிழ்மணத்தின் முதல் மற்றும் நட்சத்திரப் பக்கங்களில் பிரதானமாக இடமளிக்கப்படும் காரணத்தால் ;-)

இவ்வார இறுதியில், எனது நட்சத்திர வாரம் எப்படி இருந்தது என்று ஒரு வாக்குப் பதிவு நடத்தவும் எண்ணம் உள்ளது, பார்க்கலாம்.

தமிழ்மணத்திற்கும், வாசகர்களுக்கும் நன்றி.

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, November 30, 2007

372. டாடா நிறுவனத்தின் ஒரு லட்ச ரூபாய் கார்

இது சீக்கிரமே மார்கெட்டுக்கு வந்து விடும் என்று நம்பப்படுகிறது. குறைந்த விலையில் மிக அழகான டிசைனுடன் கூடிய காரைப் பார்த்தாலேலே, வாங்குவதற்கு ஆசை வந்து விடும் :)

Photo Sharing and Video Hosting at Photobucket

என்றென்றும் அன்புடன்
பாலா

Thursday, November 22, 2007

ரஜினி ராம்கியை வாழ்த்துவோம் !

நண்பர்களே,

ஒரு நல்ல செய்தி. நேற்று காலை, நண்பர் ரஜினி ராம்கிக்கு "அப்பா" என்ற அந்தஸ்து கிட்டியது :) அவருக்கும் அவரது மனைவிக்கும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு, அவரது குட்டி மகளின் நீண்ட ஆயுளுக்கு பிரார்த்திப்போம் ! "புதிய" தந்தையின் இப்போதைய கவலை, மகளின் விடாத அழுகை :)

எ.அ.பாலா

Wednesday, November 14, 2007

370. நந்திகிராம் vs அணுசக்தி ஒப்பந்தம் - கம்யூனிஸ்ட்களின் பல்டி

அணுசக்தி ஒப்பந்தம் குறித்து தீவிர எதிர்ப்பு காட்டி வந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் (சிபிஐ, சிபிஐ(M)) தற்போது தங்கள் நிலையிலிருந்து இறங்கி வந்து, இந்தியா IAEAவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளதற்குக் காரணம், நந்திகிராம் விவகாரம் என்றால் அது மிகையாகாது!  நந்திகிராம் பிரச்சினையினால் சிபிஐ(M) பலதரப்பு நெருக்கடிகளை எதிர்கொண்டு, பெரும் சிக்கலில் உள்ள நிலையில், இந்த பல்டியை ஆளும் காங்கிரசுடன் செய்து கொண்ட 'பேரமாக' மட்டுமே பார்க்க இயலுகிறது.  இல்லையென்றால், இவர்களின் இந்த திடீர் 'ஞானோதயத்திற்கு' வேறென்ன காரணம் இருக்க இயலும் ??? 

அதனால் தான் என்னவோ, நந்திகிராமில் சரியான நேரத்தில் / தேவையான நடவடிக்கைகள் எடுக்காதது குறித்து மேற்கு வங்க அரசை கவர்னர் கடுமையாக சாடிய பின் கூட, நமது பிரதமரோ, எங்கு பிரச்சினை என்றாலும் ஓடிச் சென்று விசாரிக்கும் சோனியா காந்தியோ, இந்தப் பிரச்சினையில் வாய் மூடி மௌனமாக உள்ளனர்!  வேறு ஏதாவது கட்சி ஆட்சி நடத்தும் மாநிலமாக இருந்திருந்தால், மத்திய அரசு மிகக் கடுமையாக நடந்து கொண்டிருக்கும். ஏன், கவர்னர் ஆட்சியே ஏற்பட்டிருக்கலாம் ! 

இந்தப் பிரச்சினையில் உச்ச்க்கட்ட காமெடி என்னவென்றால், மாவோயிஸ்ட்களுடன் சேர்ந்து கொண்டு மம்தா பானர்ஜி வன்முறை செய்வதாக பிரகாஷ் கரத் திருவாய் மலர்ந்திருப்பது தான் !  பிரச்சினையை சுமுகமாக தீர்க்க ஒரு எழவும் செய்யாமல், கவர்னரின் நியாயமான பேச்சுக்கு சிபிஐ(M) கடுமையான கண்டனம் வேறு தெரிவிக்கிறது.

கம்யூனிஸ்ட்கள் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த நிலைப்பாட்டிலிருந்து மொத்தமாக பல்டி அடித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்று ஏற்கனவே ஒரு <a href="http://balaji_ammu.blogspot.com/2007/08/352-123.html ">பதிவில்</a> குறிப்பிட்டிருந்தேன்.  அப்படி நடந்து, ஒப்பந்தம் கையெழுத்தானால், நாட்டின் மொத்த எனர்ஜி தேவையில் 5% மட்டுமே பூர்த்தி (அதுவும் 2020-இல்) செய்யக்கூடிய, விலை அதிகம் தந்து பெற வேண்டிய அணுசக்திக்காக என்ற போர்வையில், (ஒரு பிரதமரின் விருப்பத்திற்காக மட்டும்) அமெரிக்காவின் அடிவருடியாக நாம் காலம் தள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படும் !

அணு ஆயுத பரிசோதனை செய்யும் நமது சுதந்திரத்திற்கும், தேசிய பாதுகாப்பு நலனுக்கும் எதிராக இருக்கும் Hyde Act பற்றிய குறிப்பு 123 ஒப்பந்தத்தில் இருக்கும் வரை, இந்த ஒப்பந்தம் நிச்சயம் ஏற்க இயலாத ஒன்று.
 

எ.அ.பாலா

*** 370 ***

Tuesday, November 06, 2007

369. உடல் நலத்தை கெடுக்கும் தீபா'வலி'

வர வர தீபாவளியை நினைத்தால அலர்ஜியாக இருக்கிறது. ஒரு வாரம் முன்பே பட்டாசு சத்தம் காதைக் கிழிக்க ஆரம்பித்து விடுகிறது. பிறந்ததிலிருந்து, இந்த ஆறு வருடங்களாக, என் இரண்டாவது மகளுக்கு தீபாவளி என்றாலே நடுக்கம் தான். இந்த சத்தமும், புகையும் அவளை வெகுவாக பாதிப்பதால், ஒவ்வொரு தீபாவளி அன்றும் அவளுக்காக வீட்டுக்கதவுகளையும், சன்னல்களையும் திறக்கவே மாட்டோ ம்! நேற்று NDTV-யில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். இந்த பட்டாசுகளால் எவ்வளவு பெரிய உடல் நலக்கேடு என்பது தெளிவாக விளங்கியது. சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கு:

1. 2005-இல் உச்சநீதி மன்றம் 120 டெசிபல்களுக்கு மேலாக ஒலிச்சக்தி கொண்ட பட்டாசுகளை தயாரிக்கவோ, வெடிக்கவோ தடை விதித்திருந்தது. ஆனால், அதை யாரும் மதிப்பதாகத் தெரியவில்லை. இப்போதுசந்தையில் உள்ள 90% பட்டாசுகள் (ஊசிப் பட்டாசு, வெங்காய வெடி போன்றவற்றைத் தவிர!) 140 டெசிபல்களுக்கு மேல் ஒலி ஏற்படுத்தபவையே! நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, பட்டாசின் அட்டையின் மீது 'தயாரித்த மாதம்' மட்டுமே பொறிக்கப்பட்டிருக்கும், எந்த 'வருடம்' என்ற தகவல் இருக்காது. மாட்டிக் கொண்டால், அந்த பட்டாசு 2005-க்கு முன் தயாரிக்கப்பட்டது என்று சுலபமாக கூறி தப்பி விடலாம்! அது போலவே, 10 மணிக்கு மேல் வெடி வைக்கக் கூடாது என்ற கோர்ட் / போலீஸ் உத்தரவையும் யாரும் கண்டு கொள்வது கிடையாது.

2. பட்டாசு வெடிப்பதால் மூன்று வித தீங்குகள் ஏற்படுகின்றன. ஒன்று, அதிலிருந்து வரும் ஒளி கண்ணுக்குக் கெடுதல், இரண்டு, வெடிச்சத்தத்தால் கேட்கும் திறனுக்கு பாதிப்பு என்பதுடன், முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஒருவித trauma ஏற்படுகிறது. நோயாளிகள் எத்தனை அவஸ்தைக்கு உள்ளாகிறார்கள் என்பதை சற்று யோசித்தால், குறைந்தபட்சம் பெரும் சத்தம் ஏற்படுத்தும் வெடிகளையாவது வெடிக்காமல் இருப்போம்.

மூன்று, பட்டாசுப் புகையில் உள்ள நச்சு (சல்பர், பாஸ்பரஸ் .. சார்ந்த) வாயுப்பொருட்கள், காற்றில் suspended particles ஆக மிதந்து, அக்காற்றை நாம் சுவாசிப்பதால், நுரையீரலுக்கும், மூச்சுக் குழாய்க்கும் பெரும்பாதிப்பு ஏற்படுகிறது. ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு வழி வகுக்கிறது. அந்த நச்சுப் புகையால், கண்களுக்கும், தோலுக்கும் கூட கெடுதல் விளைகிறது.

3. அந்த ஒரு நாளில் மொத்தம் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசை கொளுத்தி/வெடித்து கரியாக்குகிறோம். இப்படி ஒவ்வொருவரும் கரியாக்கும் பணத்தை அநாதை இல்லங்களுக்கோ, தர்ம ஸ்தாபனங்களுக்கோ வழங்கினால் கொஞ்சம் மன நிம்மதியாவது பதிலுக்கு பெற இயலும்!

4. சுற்றுச்சூழலுக்கு பட்டாசின் நச்சுப்புகையால் எத்தகைய மாசு ஏற்படுகிறது என்பதை சொல்லி மாளாது. தீபாவளியை வெடி வைக்காமல் கொண்டாட முடியாது என்ற பட்சத்தில், அதற்கு ஒரு மாதம் முன்பாகவே, நாம் நமது இரு/நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துவதை தீபாவளி வரை தவிர்த்து, அதனால் சுற்றுச்சூழலுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்து, பின் தீபாவளி அன்று "போனஸாக" கொஞ்சம் பட்டாசு கொளுத்தி மகிழலாம் :)

5. நகரமெங்கும் வெடிக்காமல், ஒரு சில நிர்ணயிக்கப்பட்ட பொது இடங்களில் பட்டாசு வெடிக்கலாம். இப்போதெல்லாம் பலர், தீபாவளி அன்று நகரங்களின் பட்டாசு இரைச்சல் மற்றும் புகையிலிருந்து தப்பிக்க, அமைதியான இடங்களுக்கு சென்று தீபாவளி கொண்டாடுகிறார்கள்.

6. நமது சிவகாசிப் பட்டாசுகள் போதாதென்று, தற்போது சீனப் பட்டாசுகள் சந்தைக்கு வருகின்றன. இவை நம் பட்டாசுகளை விட (நம்மையும், சுற்றுச்சூழலையும்) அதிகம் பாதிக்கின்றன. ஆனால், இந்த சீன ஃபேன்ஸி வகைப் பட்டாசுகளுக்கு சந்தையில் நல்ல மவுசு உள்ளது.

நாமாக, பிரச்சினையை உணர்ந்து திருந்துவதில்லை, சட்டம் போட்டாலும் அதை மதிப்பதில்லை :(
நமது சந்ததிகளுக்கு என்ன மாதிரி (வாழ்வதற்கு மிகக் கடினமான) ஒரு பூமியை விட்டுச் செல்ல இருக்கிறோம் என்பதை நம்மில் பலர் சிந்திப்பதில்லை என்பது தான் மிக்க வேதனைக்குரியது.

Anyway, நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 369 ***

Friday, October 26, 2007

368. ஞாநியும் பூணூலும் - கி.அ.அ.அனானி

இந்த மேட்டர் கி.அ.அ.அ விடமிருந்து நேற்று வந்தது. பதிப்பிக்கக் காரணம் .... கருத்துச் சுதந்திரம் தான் ! கி.அ.அ.அ பதிவுகளுக்கு விதவிதமாக டிஸ்கி எழுதி எழுதி அலுத்து விட்டதால், இதற்கு NO Disclaimer! எப்போதும் போல கி.அ.அ.அனானி பின்னூட்ட களத்தில் நின்று விளையாடுவார் (Stand and Play) !

Please read: http://govikannan.blogspot.com/2007/10/blog-post_25.html

எ.அ.பாலா

***********************************
அடைப்புக்குள் இருப்பவை மேல் சொன்ன பதிவில் சொல்லப்பட்ட கருத்துக்கள்.

/////

ஞானியின் எழுத்துக்களில் பார்பனீயமா ? என்பது கேள்வி எழுப்பியவர்களும், ஞானியும், ஞானியின் வாசகர்கள் மட்டுமே தீர்மாணிக்க முடியும்.
ஆனால் ஞானியின் எழுத்துக்களில் பார்பனீயம் இல்லை என்பதை தேவையே இல்லாமல் பார்பனர்கள் வந்து கொடிபிடிப்பது நகைப்புக்கு இடமாக இருக்கிறது.

//////

கோவி கண்ணனின் திரிப்பு இங்குதான் ஆரம்பமாகிறது.ஞானியின் எழுத்துக்களில் பார்ப்பனீயம் இல்லை என எந்த பார்ப்பனர் இவரிடம் கொடி பிடித்தார்களோ தெரியாது.ஆனால் ஞானி பார்ப்பனர் அதனால் இப்படி எழுதினார் என்ற இவர்களது "ஞானிக்கு பூணுல் அணிவித்து அதன் மூலம் பார்ப்பனரை ஒட்டு மொத்தமாக கொச்சைப் படுத்தும் முயற்சிதான் எதிர்க்கப் படுகிறது" என்றே நான் நினைக்கிறேன்.இன்னும் சொல்லப் போனால் அந்தக் கட்டுரையைப் படித்து முதலில் ஆர்ப்பாட்டம் பண்ணி அலறித் துடித்து அவரது சட்டைக்குள் பூணுல் தேடியவர்கள்தான் உண்டே ஒழிய ஆஹா ஞானி சரியாக எழுதி விட்டார் என்று எந்தப் பார்பனரும் கொடி பிடித்ததாக எனக்குத் தெரியவில்லை.

இதில் வெளிப்படும் பாசிச தொனி தெளிவாகவே இருக்கிறது ... இந்த விஷயத்தில் பார்ப்பனர் யாரும் கேள்வி கேட்கக் கூடாது, அதோடு "பார்ப்பனர்கள்" யாரும் ஞாநியின் வாசகர்களாக இருக்கவே முடியாது என்ற கோணல் பார்வையும் வெளிப்பட்டிருப்பதும் நன்மையே, கோவியின் நோக்கம் இதில் பல் இளிக்கிறது. இதே பதிவில் சாதியை துறக்க நினைப்பவர்களை எண்ணி கோவி பெரிதாக அங்கலாய்த்து விம்மியிருப்பது நல்ல நகை முரண்.


//////ஞானியின் மீது பார்பனர்களுக்கு ஏன் திடீர் பாசம் ? //////

யாருக்கும் ஞானி மீது பாசம் பொத்துக் கொண்டு வந்ததாக தெரியவில்லை.ஏற்பில்லாத கருத்தை சொல்பவனிடம் தூண்டித் துருவிப் பார்த்து அவன் பார்ப்பனன் என்று எதன் மூலமாகவேனும் பார்ப்பனர்கள்தான் அனைத்துக்கும் காரணம் என காட்டி அதன் மூலம் ஆதாயம் தேட முயலும் மூர்க்கத்தனம்தான் கண்டிக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

/////////தன்னை பார்பனராக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத ஞானிக்கு ஏன் பார்பனர்கள் ஓடி வந்து ஞானி பார்பனீய கருத்தாக்கம் கொண்டவர் இல்லை என்று வரிந்து கட்டவேண்டும் ? இந்த கேள்விக்கு 'தான் ஆடாவிட்டாலும் பூணூல் ஆடுமோ ?' என்ற பதில் தான்கிடைக்கிறது.////////

காமாலைக் கண்ணுக்கு அப்படிப்பட்ட பதில்தான் கிடைக்கும்..ஏனெனில் ஞானி பார்ப்பனீய கருத்தாக்கம் கொண்டவர் இல்லை என வரிந்து கட்டிய அனைவரும் பார்ப்பனர் மட்டும்தானா? என யோசிப்பதை வசதியாக மறந்து விட்டு தயார் செய்த பதிலுக்கு கேள்வி தேடினால் அது இப்படித்தானே இருக்க முடியும்? அப்படியானால் மருதையனை பார்ப்பனர் என்று தூற்றிக் கொண்டு அலைந்ததே இதே கூட்டம் அப்போது யாரானும் பார்ப்பனர் வந்து ஐயோ ,பார்பனரை தூற்றுகிறானே என்று மருதையனுக்கு பரிந்து வந்து வரிந்து கட்டி கொடி பிடித்தார்களா என்ன என்ற கேள்விக்கு கோவி கண்ணனிடம் உண்மையான பதில் இருக்காது.

/////"ஞானி ஒரு பார்பனராக தெரிந்துவிட்ட காரணத்தினால், ஒரு பார்பனரை பலரும் குற்றம் சொல்கிறார்கள் என்று தானே ? பார்பனர்கள் பொறுக்க முடியாமல் கருத்து சொல்கிறார்கள்."/////

கோவி கண்ணனும் தன்னுடைய விசுவாசத்தைக் காட்டத்தான் இவ்வாறு கருத்து சொல்கிறார் என்று அடுத்தவரும் கூறலாமல்லவா?.

///////கருத்து ஒவ்வாமைகள் ஏற்படும் போது சொல்லுபவரை எள்ளி நகையாட அவரது சாதியை இழுப்பது என்பது கவலை அளிக்கிறது/////

இப்படி சொல்லும் கோவி கண்ணனுக்கு சொல்வதெல்லாம் இது கவலைக்குரியது மட்டுமல்ல கயமைத்தனமும் கூட.இந்தக் கயமைத்தனம்தான் ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டிருக்கிறது.""... ஞானிக்கு திடீர் ஆதரவு கொடுக்கும் பார்பனர்களும் சரி "" என்று எள்ளுவதன் மூலம் ஆதரவளித்தவர் அனைவரும் பார்ப்பனர் என்று நேரடியாகச் சொல்லாமல் (அதுவும் ஞானிக்கு ஆதரவா அல்லது அவர் சொன்ன கருத்துக்கு ஆதரவா அல்லது அவரது கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவு தெரிவித்தார்களா என்றும் சொல்லாமல்.) "ஆதரவளித்த" என்று பொத்தம் பொதுவாக சொல்லி பூணுல் அணிவித்து தூற்ற முயலும் இந்த அறிவுஜீவித்தனமான உத்தியும் உச்சகட்ட கயமைதான்.

கி.அ.அ.அனானி
***************************


*** 368 ***

Monday, October 22, 2007

கண்டனக் கூட்டம் எனும் கேலிக்கூத்து-By கி அ அ அனானி

கி.அ.அ.அ விடமிருந்து ஒரு மெயில் ... ஒரு "கண்டன மேட்டர்" அவருக்கே உரிய ஸ்டைலில் ! நான் ஞாநி எழுதியதையும் படிக்கவில்லை, இது குறித்து வலையில் வந்த பதிவுகளையும் பார்க்கவில்லை, அதனால் பிரச்சினை / கண்டனம் குறித்து தெளிவாகத் தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பமும் தற்சமயம் இல்லை! இருந்தாலும், கருத்துச் சுதந்திரத்தின் மேல் எனக்குள்ள அசைக்க முடியாத நம்பிக்கையால் கி.அ.அ.அ மேட்டரை பதிப்பிக்கிறேன் (பதியாவிட்டால், கி.அ.அ.அ. என்னை பிரித்து மேய்ந்து விடுவார் என்று உள்ளூர பயமும் ஒரு காரணம் :)) இதற்கு வரும் பின்னூட்டங்களுக்கு எதிர்வினையாக நான் எந்த கருத்தும் தெரிவிப்பதாக இல்லை !!! கி.அ.அ.அனானி அவர்களே பின்னூட்ட களத்தில் நின்று விளையாடுவார் (Stand and Play) ;-)
எ.அ.பாலா
********************************************************

ஞாநி என்கின்ற அதி புத்திசாலி வயசாகிவிட்டதே...வாரிசுகள் முன்னுக்கு வந்து வயதானவருக்கு வயதுக்குறிய ஓய்வைத்தரட்டுமே என ஓ போட்டு விட்டாராம்?

ஆஹா...ஆரம்பித்து விட்டார்களையா? உன் சாதி அப்படி அதனால்தான் நீ இப்படி சொன்னாய் என்பதிலிருந்து ஆரம்பித்து மஹால் புக் பண்ணி கண்டனக் கூட்டம் போடுவது வரை நன்றியை நன்றாகவே காட்டுகிறார்கள்.

வாஜ்பாயைக் கேட்டாயா? அத்வனி மகள் பிரதீபாவை சொன்னாயா ? எம் ஜி ஆரை சொன்னாயா என கருத்தாழம் மிக்க கேள்விகளையும் அள்ளி வீசுகிறார்கள். ( அவர்களையெல்லாம் கேட்காததால் இதையும் கேட்கக் கூடாது அல்லது இது பற்றி எதுவும் சொல்லக் கூடாது என்பதெல்லாம் ஒரு லாஜிக்கா என்பது ஒரு புறம் இருக்கட்டும்...நான் கீழே கேட்பதற்கு முதலில் இவர்களது பதில் என்ன ?)

போன தடவை மக்கள் மாங்காய் மடையர்களாய் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்து சட்ட சபைக்கு அனுப்பினார்களே..அப்போது தனியாளாக சட்ட சபைக்கு போக பயந்து போகாமலேயே உடம்பு சரியில்லை என்று உதார் விட்டுக் கொண்டிருந்த போது எங்கே போயிருந்தீர்கள் ? அப்போது போட வேண்டியதுதானே இந்தக் கண்டனக் கூட்டத்தை..தேர்ந்தெடுக்கப்பட்ட எம் எல் ஏ சட்டசபைக்குக் கட்டாயம் போகத்தான் வேண்டும் என்று.

அப்போது எங்கிருந்தீர்கள் ? குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு முறையேனும் சட்ட சபை போகவில்லையெனில் எம் எல் ஏ அந்தஸ்து பறி போய்விடும் என்பதற்காகா நாலு பேர் பிடித்துக் கொள்ள நடந்து போய் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டு வாசலோடு திரும்பியவருக்கு ஆரத்தி எடுத்த கூட்டத்தில் ஓ போட்டுக் கொண்டு இருந்தார்களா ?

நல்ல விதமாக கண்டனத்தை தெரிவித்தார்களாம்..பாராட்டி பதிவுகள் வேறு !!!!இதில் இதற்குமேல் சொல்ல ஒன்றும் இல்லை அதனால் இத்தோடு விட்டார்கள் இல்லையெனில் எந்த எல்லையையும் தொடாமலா விடுவோம் நாம் ?

நல்ல வேளை..இந்த முடிசூடா மன்னர் தமது பரப்பரைக்கு தனது பட்டத்தை தரலாமே என்றுதான் எழுதினார் ஞாநி...இல்லையென்றால் இத்தனை நேரம் ஞாநிக்கும் ஆனந்த விகடனுக்கும் மதுரை தினகரன் ஆபிஸில் ஏற்பட்ட கதிதான்.

இந்த மாதிரி கடைந்தெடுத்த ஜால்ராக்களுக்கெதிரான என் கண்டனத்தை இங்கே பதிவு செய்கிறேன்


கி அ அ அனானி.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails